Ad

வியாழன், 27 மே, 2021

புத்தம் புது காலை : நாப்தலின் உருண்டைகள் கொல்வது பூச்சிகளை மட்டுமே அல்ல?!

நமது புத்தக அலமாரி, பழைய சூட்கேஸ்கள், பாட்டியின் பீரோ, மடித்து வைக்கப்பட்ட கம்பளி இவற்றைத் திறந்தவுடன் நமது நாசியில் அடிக்கும் வாசனை நம்மைப் பல பழைய நினைவுகளுக்குக் கடத்திச்செல்லுமே? நாப்தலின் உருண்டைகள்!

கிராமங்களில் பாச்சை உருண்டை அல்லது பூச்சி உருண்டை என்றால் புரியும். பீரோவில் வைத்தால் கற்பூரம் போல காற்றில் கரைந்துவிடும் சிறிய வெண்மையான நாப்தலின் உருண்டைகள், பார்க்க சாதுவாக இருப்பது போலிருந்தாலும் உண்மையில் அவ்வளவு சாது கிடையாது.


அந்த நாப்தலின் உருண்டைகள் எப்படி நம்மை பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், எப்படி அவை நமது வீட்டிற்குள் நுழைந்தன என்பதைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

1800-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், நிலக்கரியிலிருந்து பெறப்பட்ட தார் (coal tar) என்ற பொருளை உருக்கி புதிய இரசாயனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜான் கிட் என்ற விஞ்ஞானிக்கு, அந்த கரிய திரவத்திலிருந்து வெண்மையான மெழுகு போன்ற திடப்பொருள் ஒன்று கிடைத்தது. அதுதான் நாப்தலின் என்று பின்பு கண்டுணர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அதை எரித்தபோது பாரா டைக்ளோரோ பென்சீன் என்ற மற்றுமொரு காற்றில் கரையும் திடப்பொருளும் கிடைத்தது. இரண்டிலுமே பூச்சிகளை அண்டவிடாமல் இருக்கும் தன்மை இருந்ததால், இரண்டையும் கொஞ்சம் வாசனைப் பொருட்களுடன் சேர்த்து உருவாக்கியதுதான் இந்த பூச்சிக்கொல்லி வாசனை உருண்டைகள்.

ஆரம்ப நாட்களில், பாம்பு, பல்லி, எலி, வௌவால் ஆகியவற்றை விரட்டப் பயன்படுத்தப்பட்ட இந்த பூச்சி உருண்டைகள், நாளடைவில் மனிதர்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருளாக மாறிவிட்டது. அதிலும் தனது படுக்கையறையை குளுமைப்படுத்த ஏசியைப் பொருத்தி, படுக்கையறை ஜன்னல்களை மனிதன் அடைத்தபோது, காற்றோட்டமில்லாத அறைகளிலிருந்த அலமாரிகளில், தனது உயர்ந்த விலை உடைகளையும், உடைமைகளையும் பூச்சி-பூஞ்சையிலிருந்து காக்கும்நிலை மனிதனுக்கு ஏற்பட்டது. அப்படி வீட்டிற்குள் நுழைந்த பூச்சி உருண்டைகள் தான், அலமாரிகளிலும், பீரோக்களிலும், சூட்கேஸ்களிலும் அடைக்கலம் பெற்று, பின்பு கழிவறைகள், வாஷ்பேசின்கள், சமையலறை சிங்க்குகள் என நமது வீடுகளில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன.

திடப்பொருளாக இருக்கும் நாப்தலின் காற்றில் கலக்கும்போது இதிலிருந்து வெளிவரும் வாசனை கலந்த வாயு சிறிய ஜீவன்களை சத்தமே இல்லாமல் கொல்கிறது. சிறிய உருவம் கொண்ட பூச்சிகளை மட்டும்தான் இது கொல்லும், நம்மை எதுவும் செய்யாது என்று எண்ணிய மனிதன், அதனை டன் கணக்கில் உற்பத்திசெய்தான். வீட்டிலும், காற்றிலும் கலக்கவிட, தனது வேலையை இப்போது மனிதர்களிடையேயும் காட்டி வருகின்றன இந்த வெள்ளை நிறப் பூச்சி உருண்டைகள்.


முதலில் முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும் இந்த நாப்தலின் உருண்டைகளை, நன்றாக முகர்ந்தால் தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படலாம். ஒருநாளில் 19 மைக்ரோகிராம் அளவு நாப்தலின் கலந்த காற்றை சுவாசிப்பது என்பது, 0.002 மைக்ரோகிராம் அளவு நாப்தலினை உட்கொள்வதற்கு சமம் என்கிறது ஆய்வு முடிவுகள். இந்த அளவுகள் அனைத்தும் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதுபோலத் தோன்றினாலும், வருடக் கணக்கில் இது தொடரும்போது அச்சமூட்டும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆம்... காற்றில் கலந்த நாப்தலின் சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் மட்டுமன்றி வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும் என்றாலும், சுவாசத்தில் அதிகளவு இருந்தாலோ அல்லது எதிர்பாராமல் அவற்றை விழுங்கும்போதோ ஆல்பா நாஃப்தால் என மாற்றமடையும் நாப்தலின் உருண்டைகள், இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒன்று, சுவாசப்பாதைகளில் அழற்சி, வீக்கம், அதன் காரணமாக ஏற்படும் அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ். அடுத்து சுவாசத்திலிருந்து இரத்தத்தில் கலக்கும் இந்த இரசாயனங்கள், நேரடியாக இரத்த அணுக்களை பாதித்து, இரத்த சோகையை (hemolytic anaemia) ஏற்படுத்துவதுடன், அதன் காரணமாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.


ஆக, குழந்தையைப் போர்த்தும் துணியில் நாப்தலின் வாசனை இருந்தாலே குழந்தைகளுக்கு அது இரத்த சோகை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பது புரிகிறதல்லவா? ஆனால் அதைவிட, இந்த ஆல்ஃபா நாப்தால் க்ரோமோசோம்களிலும் பிறழ்வுகளை உண்டாக்கி, (chromosomal aberrations) செல்களின் வடிவமைப்பையே மாற்றி புற்றுநோய்களை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென்களாக உருவெடுப்பதுடன், இரத்தப் புற்றுநோய்களில் ஒன்றான லிம்ஃபோமாவை (Non-Hodgkin’s Lymphoma) குழந்தைகளில் இவை ஏற்படுத்துகின்றன என்கிற சமீபத்திய ஆய்வு முடிவுகள்.


எனவே, டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மனம் கவரும் வாசனையுடன் பார்க்க அழகாக இருக்கும் இந்த வெண்மையான அந்துருண்டைகளைக் கண்டால் கண்களைத் திருப்பிக் கொண்டு வேப்பங்கொழுந்து, கிராம்பு, யூகலிப்டஸ், லெமன் கிராஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி நமது அடுத்த தலைமுறையை காப்போம்!
#WorldBloodCancerDay



source https://www.vikatan.com/news/healthy/naphthalene-balls-are-very-dangerous-to-humans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக