Ad

வெள்ளி, 14 மே, 2021

ஊரடங்கில் பசிபோக்கும் அன்பு சுவர் - நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை!

கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த பலர் வருமானமின்றி தவிக்கின்றனர். பலரது வாழ்வாதஅரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூல்நிலையில் எந்த சங்கடமும் இல்லாமல் உணவின்றித் தவிப்போரின் பசியினை போக்கும் விதமாக கும்பகோணத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வித்தியாசமான முறையில் உணவு கொடுத்து வருவது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா லாக்டெளனில் பசி போக்க வைக்கப்பட்டுள்ள உணவு

கும்பகோணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து `யார் கொடுக்குறதுன்னும் தெரிய கூடாது,யாரும் பசியாகவும் இருக்க கூடாது' என்ற எண்ணத்தில், அன்பு சுவர் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உணவு சமைத்து பொட்டலமாக ரெடி செய்து ஒரு இடத்தில் வைத்து விடுகின்றனர். உணவு தேவைப்படுபவர்கள் தாங்களாக போய் தங்களுக்கு தேவையான அளவு சாப்பாட்டை எடுத்து கொள்ளலாம். இளைஞர்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டிற்கு பெரும் வரவேற்ப்பும்,பாராட்டும் கிடைத்துள்ளது.

இது குறித்து இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரான காளிதாஸ் எப்பவரிடம் பேசினோம்,``கொரோனா பரவலுக்கு முன்பாகவே கும்பகோணத்தில் ஆதரவற்ற பலர் சாலையோரத்தில் வசித்து வந்தனர். தற்போது கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால் அவர்கள் உணவின்றி தவிக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. இதே போல் தினக் கூலி வேலை பார்த்து வந்த பலர் வேலையிழந்துள்ளனர். திடீரென அவர்களுக்கு வருமானம் நின்றதால் என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்து நிற்கக் கூடிய நிலை உண்டானது.

உணவு

பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என, யாரிடமும் கேட்க சங்கடப்பட்டுக் கொண்டு பலர் இருந்து விடுவர். இது போன்ற சூல்நிலையை தவிர்க்கவும், எல்லோரும் பசியார சாப்பிடும் வகையில், உணவு கொடுக்க ஏற்பாடு செய்தோம்.இதனை யார் கொடுக்கிறார்கள் என்பது சாப்பாட்டை எடுத்து கொள்பவர்களுக்கு தெரியாத வகையில் இதற்கான ஏற்பாட்டை செய்ய நெனச்சு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து அன்பு சுவர் என்ற அமைப்பை தொடங்கினோம்.

தினமும் மதியம் 100 பேருக்கு தயிர்,தக்காளி, எலுமிச்சை,சாம்பார் உள்ளிட்ட சாதங்கள் சமைத்து, அதனை பொட்டலங்களாக ரெடி செய்து சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் உள்ள கணிதமேதை ராமானுஜன் நினைவிடம் அருகே, மரச் சட்டகம் ஒன்றை வைத்து அதில் அடுக்கி வைத்து விடுகிறோம். சாதத்திற்கான கூட்டு மற்றும் தண்ணீர் பாட்டிலையும் வைத்து விடுகிறோம். அந்த இடத்தில் நாங்கள் யாருமே இருக்க மாட்டோம்.

Also Read: கரூர்: 'தளபதி கிச்சன்; மூன்று வேளை இலவச உணவு!'- தொடங்கிவைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

பசியில் இருப்பவர்கள் அந்த இடத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு செல்லாம். சங்கடத்தில் தவிக்கும் பலருக்கு இந்த முறை வரப்பிரசாதமாக இருக்கிறது. மதியம் 12 மணிக்கு உணவு பொட்டலத்தை வைத்து விடுவோம். தேவைப்படுவோர் வந்து எடுத்து செல்கின்றனர். மூன்று நாள்களாக இதனை செய்து வருகிறோம். ஒருவேளை உணவு மிச்சப்பட்டால் அவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் இருப்பவர்களுக்கு கொடுத்து விடுகிறோம். இதற்கு தினமும் ரூ 2,000 செலவாகிறது. இருப்பவர்கள் கொடுக்கலாம்,இல்லாதவர்கள் எடுக்கலாம் என்பதே இதன் நோக்கம். வயிறு பசிக்கும் போது யாரும் தயங்கி நிற்கக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள் இணைந்ததால் இவை நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இளைஞர்கள் இதற்கான நிதி உதவியை செய்கின்றனர். கொரோனா லாக்டெளனுக்கு பிறகும் இதனை செய்ய இருக்கிறோம்" என்றார்.

இளைஞர்களின் இந்த சேவை பாராட்டுதலுக்குரியது.



source https://www.vikatan.com/news/general-news/corona-lockdown-kumbakonam-youngster-give-food-for-needy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக