Ad

செவ்வாய், 25 மே, 2021

புளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் கோலோச்சிவரும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

புளூம்பர்க் வெளியிட்ட ஆசியப் பணக்காரர் பட்டியலில் இவருடைய சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலர் என சொல்லப்பட்டிருக்கிறது. முதலிடத்தில் 76.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இருக்கிறார். உலகளாவிய பணக்காரர்கள் தரவரிசையில் முகேஷ் அம்பானி 13-வது இடத்திலும், கெளதம் அதானி 14-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, இந்தியா கொரோனா நோய் தொற்றுப் பரவலால் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால், பல்வேறு மாநிலங்களில் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்தியாவின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.

இந்தப் பதற்றமான சூழ்நிலைக்கு இடையிலும் கெளதம் அதானி தனது வர்த்தகத்தை பன்மடங்கு விரிவாக்கம் செய்துள்ளார். விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி, துறைமுக வர்த்தகம் என பல துறைகளில் இவருடைய சொத்து மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகளால், இந்த நிறுவனங்களின் பங்கு விலையும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

குறிப்பாக, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை தோராயமாக 1,145%, அதானி எஸ்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை தோராயமாக 825%, அதானி டிரான்ஸ்மிஷன் தோராயமாக 615%, அதானி கிரீன் எனெர்ஜி பங்குகள் தோராயமாக 435%, மற்றும் அதானி பவர் நிறுவனம் தோராயமாக 190% வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 33.8 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 66.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரே வருடத்தில் சுமார் 32.7 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் கௌதம் அதானி.

பங்குச் சந்தை முதலீடு

இந்த புளூம்பர்க் பட்டியலில் நீண்ட காலம் அலிபாபாவின் ஜாக்மா முதலிடம் வகித்த நிலையில், சீனா அரசின் தடையால் இவரது சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. இதனால் தண்ணீர் பாட்டில் மற்றும் பார்மா நிறுவனங்களின் தலைவரான ஜோங் ஷான்ஷான் 63.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் 2-வது பணக்காரராகவும், சீனாவில் டாப் பணக்காரராகவும் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தார். தற்போது, இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் சீனாவின் பெரும் பணக்காரரான ஜோங் ஷான்ஷான்-ஐ பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் 2-வது பெரும் பணக்காரராகியிருக்கிறார் கெளதம் அதானி.



source https://www.vikatan.com/business/miscellaneous/adani-overtakes-chinas-zhong-shanshan-and-becomes-asias-second-richest-person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக