Ad

செவ்வாய், 25 மே, 2021

'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் - தமிழீழ சர்ச்சைகளும் விளக்கமும்...

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் அமேசன் பிரைமில், ஜூன் 4-ம் தேதி வெளியாகவிருக்கும், 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ, 'தி ஃபேமிலி மேன்' என்ற அதன் ஒரிஜினல் சீரீஸின் புதிய ட்ரெய்லரை மே 19-ம் தேதியன்று வெளியிட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

வைகோ

அந்தக் கடிதத்தில்,``தமிழர்களைப் பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கிறார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ்ப் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி ஃபேமிலி மேன்- 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என எச்சரித்துள்ளார். ஒருபுறம், ட்ரெய்லர் வெளியான இரண்டே நாளில், பல மில்லியன் வியூவ்ஸ்களுடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் அதே வேளையில், கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில்``சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும்'' என குரல் எழுப்பி வரும் இயக்குநரும் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவருமான களஞ்சியத்திடம் பேசினோம்.

களஞ்சியம்

``விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் கதையாசிரியர் குழு அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த முயற்சி செய்திருக்கிறார்கள். உலகில் எந்தத் தீவிரவாத அமைப்பு வங்கி, கல்வி நிலையம், சிறைச்சாலை, காவல்நிலையம் வைத்து நடத்தியது என படக்குழுவினர் விளக்கவேண்டும். ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கத்தை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. அந்தக் கதை எழுதியவர்கள் குற்றவாளிகள். ஆனால் அதில் நடித்த தமிழ் நடிகர்கள் அதைவிட முதன்மையான குற்றவாளிகள். அவர்களுக்கு கதை குறித்து முழுமையாக விவரிக்கப்படவில்லையா, இல்லை இவர்களின் கதாபாத்திரத்துக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் தொடர்பில்லாமல் எடுத்திருக்கிறார்களா என்பதை இதில் நடித்த தமிழ் நடிகர்கள் விளக்க வேண்டும். ஒருவேளை, விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரித்தது குறித்து தெரிந்தும் அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள். அவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவர்கள் மட்டுமல்ல, வேறு எந்த நடிகர்களும் இனிவரும் காலங்களில் வரலாற்றுக்குத் துரோகம் செய்யும் படங்களில் நடிக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் வரலாற்றைத் திரித்துக் கூறுவது பெருங்குற்றம். கதைக்கு ஆன்டி எலமென்ட் வேண்டும் என்பதற்காக விடுதலைப் புலிகளை பயன்படுத்துவது மிகவும் தவறு. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆரம்ப காலங்களில் ஆயுதம் கொடுத்து பயிற்சியளித்தது இந்தியாதானே. அவர்கள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்றால் எப்படி இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு உதவி செய்திருக்கும். அது ஒரு தேசிய இன விடுதலைக் குழு என்பதற்காகத்தானே உதவி செய்தது. அதனால், அடிப்படையே தவறாக இருக்கும் இந்த வெப் சீரிஸ் அப்படியே வெளியாக இந்திய அரசு ஏற்கக் கூடாது. தமிழக அரசும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமேசான் நிறுவனமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அந்தக் காட்சிகளை நீக்கவேண்டும்'' என்கிறார் அவர்.

சோமீதரன்

ஈழத்தைச் சேர்ந்தவரும் ஆவணப்பட இயக்குநருமான சோமீதரனிடம் பேசினோம்,

``எந்தவொரு படைப்பையும் தடை செய்வது, தடை செய்யக் கோருவது தவறுதான். அதை அரசு செய்தாலும் சரி, அரசியல் இயக்கங்கள் செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அதேவேளை, ஈழப்பிரச்னையைக் கையாள்வதில் தெளிவில்லாமல் தவறான பதிவுகளைக் கொண்ட பல திரைப்படங்களும் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. புனைவுதான் என்றாலும் அடிப்படையையே தவறாகச் சித்தரிக்கிறார்கள். அதைப் புரிதல் இல்லாமல் செய்கிறார்களா, இல்லை திட்டமிட்டு செய்கிறார்களா என்று தெரியவில்லை. எம் உணர்வுகளை வெளிப்படுத்துகிற அதேவேளை காலம் முழுவதும் எதிர்த்துக்கொண்டே இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. ஈழ விடுதலையை ஆதரிப்பவர்களும் தரமான படைப்புகளை உருவாக்க முன்வரவேண்டும். ஈழப்போராட்டம், ஈழத்தமிழரின் வாழ்வியல் ஆகியவற்றை உலகின் முன் சரியான முறையில் பதிவு செய்து காட்சிப்படுத்த வேண்டிய அவசியத்தையே இத்தகைய தவறான சித்திரத்தை உருவாக்கும் படைப்புகள் நமக்கு உணர்த்துகிறது''என்கிறார் அவர்.

Also Read: சமந்தாவின்`ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ்... ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்திரிக்கிறதா? #TheFamilyMan2

இந்த சர்ச்சைகள் குறித்து, இந்தத் தொடரின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே கொடுத்துள்ள விளக்கத்தில்,

``ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில ஊகங்களும், கருத்துகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எமது நடிகர்கள் குழுவில் பலர் மற்றும் படைப்பாக்க மற்றும் கதாசிரியர் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமிழர்கள். தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். தமிழ் மக்கள் மீது அதிக அன்பும், மரியாதையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த சீரீஸ் உருவாக்கத்துக்காகப் பல ஆண்டுகள் கடும் உழைப்பை நாங்கள் தந்திருக்கிறோம். இதன் முதல் சீசனில் நாங்கள் செய்ததைப்போலவே எமது பார்வையாளர்களுக்கு சிறப்பான, உணர்வுகளை மதிக்கிற மற்றும் நடுநிலையான கதையை வழங்குவதற்கு மிகப்பெரிய சிரமங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

புதிய சீசன் ஒளிபரப்பாகும்வரை காத்திருக்குமாறும், நிகழ்ச்சியைப் பார்க்குமாறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அதை நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் அறிவோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா

இந்தநிலையில், தி ஃபேமிலி மேன் - 2' தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழகத் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில்,``தி ஃபேமிலி மேன் - 2' என்ற, ஹிந்தித் தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது எனக் கருத முடியாது. தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை, பயங்கரவாதியாகக் காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடி தாக்குதல். இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

இந்தத் தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது. இந்தத் தொடரானது, ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது, தமிழக தமிழர்களின் உணர்வுகளையும், பெருமளவில் புண்படுத்தி உள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும். அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-family-man-part-2-trailer-issue-in-portrayal-of-tamil-eelam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக