தஞ்சாவூரில் கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்து பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்த சுமார் 500 கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு போலீஸ் சார்பாக 15 நாள்களுக்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட 20 பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் இதனை வழங்க பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் பெற்று கொண்டனர்.
கொரோனா பரவலில் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. தினமும் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்கிற நிலையில் ஆயிரகணக்கான கூலி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளது. லாக்டெளனில் வேலையிழந்ததால் ஆயிரகணக்கான கூலி தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் இதே போல் ஏ.ஒய்.ஏ.நாடார் தெருவில் ஏகப்பட்ட கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வருமானத்தை இழந்ததால் அந்த குடும்பங்கள் தவித்து நின்றனர். அரிசி,மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் திண்டாடி வந்தனர். இந்த தகவல் தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து தன்னார்வலர்களுடன் இணைந்து போலீஸ் சார்பாக பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவ எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் முடிவு செய்தார்.
அதன்படி எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிராஜன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் உள்ளிட்ட போலீஸ் தரப்பினர் ஏ.ஒய்.ஏ.நாடார் தெரு பகுதிக்கு சென்றனர். 15 நாள்களுக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையினை ஒவ்வொரு வீடாக சென்று எஸ்.பி வழங்கினார். இதை பெற்று கொண்ட கூலி தொழிலாலர்கள் நெகிழ்ச்சியடைந்து போலீஸ் டீமிற்கு நன்றி தெரிவித்தனர்.
அடுத்த 15 நாள்களுக்கு எந்த கவலையும் இல்லை என பொதுமக்கள் போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தனர். நிவாரணங்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியதாவது, ``முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், சோதனை சாவடிகள் அமைத்து, அனுமதி பெற்ற வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்லவதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அனுமதி இல்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகிறோம். நேற்று மட்டும் 316 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,ஊரடங்கு விதிமுறையை மீறியதாக 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி விற்பனை வண்டிகள் தடைப்படாமல், அனைத்து இடங்களுக்கும் சென்ற வர போலீஸார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
ஊரடங்குக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்தால்,அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஊரடங்கு விதிமுறையை மீறித் திறந்திருந்த 2 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால்,வேலையிழந்து தவிக்கும் கூலித் தொழிலாளிகளின் 500 குடும்பங்களை அறிந்து அவர்களுக்குத் தேவையான மளிகை,காய்கறி பொருள்களை போலீஸார் சார்பில் வழங்கி வருகிறோம். ஒரு குடும்பத்திற்கு 15 நாட்களுக்குத் தேவையான 20 பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/thanjavur-police-helps-families-affected-by-corona-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக