Ad

வியாழன், 13 மே, 2021

சூயஸ் கால்வாய்: எவர்கிவன் கப்பலை விட மறுக்கும் எகிப்து - கால்வாயை விரிவுபடுத்தவும் திட்டம்!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் ``எவர் கிவன்"என்ற ராட்சத சரக்குக் கப்பல் சிக்கி, உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கப்பலை மீட்பதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, ஆறு நாட்கள் நடந்த தொடர் போராட்டத்தின் இறுதியாக எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டது.

கப்பல் முழுமையாக மீட்கப்பட்டாலும் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. காரணம், அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பு. உலகின் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயில், சிக்கிய எவர்கிவன் கப்பலால், நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து, அந்தப் பகுதியின் கடல் வர்த்தகம் முழுமையும் பாதிப்புக்குள்ளானது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பல்

இதனால், சூயஸ் கால்வாயில் சிக்கி வர்த்தகப் பிரச்சினையை உண்டாக்கிய எவா் கிவன் கப்பலை, பாதிப்புக்குள்ளான எகிப்து அரசாங்கம் முடக்கி உள்ளது. இந்த இழப்பை சரிகட்ட, தைவானைச் சேர்ந்த அந்த கப்பல் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷாவிடம் (Shoei Kisen Kaisha) சுமார் 6,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என எகிப்து அரசும், சூயஸ் நிறுவனமும் உத்தரவிட்டிருக்கின்றன. மேலும், இழப்பீட்டுத் தொகை வந்து சேரும் வரை, எவர் கிவன் கப்பல் எகிப்திலிருந்து கிளம்பாது, எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளனர். தற்போது எவர்கிவன் கப்பல், சூயஸ் கால்வாயின் மையப்பகுதியில் இருக்கும் ``கிரேட் பிட்டர்” ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: மிதக்கும் நிலையில் `எவர் கிவன்’ கப்பல் - முடிவுக்கு வருகிறது சூயஸ் கால்வாய் சிக்கல்!

இதற்கிடையில், சூயஸ் கால்வாயை விரிவு படுத்தப்போவதாக மேலும் ஒரு அறிவிப்பையும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து, கடந்த செவ்வாய்கிழமை இஸ்மைலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கால்வாய் நிர்வாகத்தின் தலைமை ஆணையர் ஒசாமா ராபி, ``சூயஸ் கால்வாயின் தெற்கு பகுதியான சீனாய் தீபகற்ப பகுதியை, கிழக்கு நோக்கி 44 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தவும், அதேபோல் கால்வாயின் ஆழத்தை 66 அடியிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், ``கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாவது வழித்தடத்தை 10 கி.மீ. அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாகவும், இதனால் இரண்டு வழித்தடமும் சேர்ந்து, மொத்தம் 82 கி.மீ. அளவுக்கு நீளம் கொண்டதாக கால்வாய் அமையும். இந்த விரிவாக்கத்தால் கால்வாயில் மிகப்பெரிய கப்பல்கள் முதற்கொண்டு, அதிக அளவிலான கப்பல்கள் மிக எளிதாக பயணம் செய்து கால்வாயை கடக்கும்"என நம்பிக்கை தெரிவித்தார்.

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல்

1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய், 193 கி.மீ நீளமும், 24 மீ ஆழமும், 205 மீ அகலமும்கொண்டது. எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துவருகிறது சூயஸ் கால்வாய். குறிப்பாக, உலக நீர்வழி வர்த்தகத்தில் 10% சூயஸ் கால்வாய் மூலமே நடக்கிறது.

ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதியோடு, ஆசியாவையும் ஆப்ரிக்காவையும் பிரிக்கும் செங்கடலை இணைக்கும்படி அமைக்கப்பட்டுள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் சிக்கிய எவர் கிவன் கப்பலால் அதன் நீர்வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது.

சுமார் 400 மீட்டர் (1313 அடி) நீளமும், 59 மீ அகலமும் உடைய இந்தக் கப்பல் தைவானைச் சேர்ந்த எவர்கீரின் என்ற கடல்சார் (Evergreen Marine corp) நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ராட்சத கப்பல் அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர் ஷிப் (Ultra large container ship-ULCS) வகையைச் சேர்ந்தது.

இந்த கப்பல், சீனாவிலிருந்து சுமார் 20,000 சரக்கு கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ராட்டர்டாமுக்கு (Rotterdam) சூயஸ் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயின் பாதையை அடைத்தபடி இரு சுவர்களிலும் மோதி நின்றது. இதனால் சூயஸ் கால்வாய், பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி முற்றிலுமாக அடைபட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக வர்த்தகப் போக்குவரத்து தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/ever-given-ship-arrested-impounded-suez-canal-to-be-expanded

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக