Ad

வியாழன், 13 மே, 2021

`ஹைட்ரஜன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆக்ஸிஜன் தயாரிக்க உடனடி அனுமதி!’ -சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி அமைச்சர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். இதன்பின் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கலந்தாலோசித்தனர்.

தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் பிளான்ட் மற்றும் உணவு தயாரிக்கப்படும் விதம் மற்றும் கொரோனா வார்டுகளை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த காலங்களில் கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்க உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகள் இணைந்து பணிகளை மேற்கொண்டது போல தற்போதும் இந்தத் துறைகளின் அலுவலர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளைச் சம்மந்தப்பட்ட பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கொரோனா நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவிட் நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழகத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் அனைத்து ஆக்ஸிஜன்களையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும். தற்போதைய ஆக்ஸிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு, ஹைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட ஆக்ஸிஜன் தயாரிக்க முன்வந்தால் அவர்களுக்குச் சுற்றுச்சூழல் துறை சார்பில் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். அதோடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் உள்ள என்.ஜி, ஓ, என்.என்.எஸ், சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னார்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 8 மணிநேரத்திற்கு 50 பேர்கள் எனக் குழுவாக நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான சுகாதாரமான உணவு திமுக சார்பில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி மற்றும் பிற நோயாளிகளுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஷ்ன் பிளான் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க வரும் 17ம் தேதி முதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் பயன் பெறுவதற்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறை வசதிகளும், தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் வசதிக்காக 300 ஆக்ஸிஜன் கண்காணிப்பு மீட்டர்கள் விரைவில் வழங்கப்படும். அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் சித்த மருத்துவ பிரிவு மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/hydrogen-production-companies-get-immediate-permission-to-produce-oxygen-minister-of-environment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக