Ad

வியாழன், 13 மே, 2021

மகாராஷ்டிரா: `சமூக வலைதளங்களை கையாள ரூ.6 கோடி?!’ -கடும் எதிர்ப்பால் கைவிட்ட துணை முதல்வர்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சமூக வலைத்தளங்களை கையாள ஏற்கனவே தனியார் ஏஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏஜென்சிதான் முதல்வரின் அறிவிப்பு உட்பட அனைத்து விபரங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும். அது போன்ற ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தனது சமூக வலைத்தளங்களை கையாள துணை முதல்வர் அஜித் பவார் முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி புதிதாக நியமிக்கப்படும் தனியார் ஏஜென்சி துணை முதல்வர் அஜித்பவாரின் பேஸ்புக், பிளாக்கர், யுடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை கையாளும். இதற்காக ரூ.6 கோடி கோடி செலவிட திட்டமிடப்பட்டது. தனியார் ஏஜென்சி துணை முதல்வர் அஜித் பவாரின் செயலாளரிடம் கலந்து ஆலோசித்த பிறகு நியமனம் செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அஜித் பவார்

தற்போது அரசு துறையில் இது போன்ற சமூக வலைத்தளங்களை கையாள போதுமான தொழில் நுட்ப நிபுணர்கள் இல்லை. எனவேதான் வெளியில் இருந்து தனியார் ஏஜென்சியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்படும் ஏஜென்சி, துணை முதல்வரின் சமூக வலைத்தளங்களில் துணை முதல்வரின் முக்கிய முடிவுகள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்யும். ஏற்கனவே அரசுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏஜென்சிகளில் ஒன்றில் இருந்து இந்த ஏஜென்சி தேர்வு செய்யப்படும். முதல்வரின் சமூக வலைத்தளங்களை கையாளும் ஏஜென்சியே இந்த பணியையும் சேர்த்து செய்வதாக இருந்தால் அந்த நிறுவனத்திற்கு கூடுதல் கட்டணம் கொடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், `பொது தகவல் துறைக்கு ஆண்டுக்கு 150 கோடி செலவிடப்படுகிறது. தேவையான ஊழியர்களும் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது தனி ஏஜென்சி எதற்கு?’ என்று பொதுதகவல் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே மகாராஷ்டிரா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த செலவு தேவையா என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏ.ராம் கதமும் அரசின் இம்முடிவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடுமையான விமர்சனம் வந்ததை தொடர்ந்து துணைமுதல்வர் அஜித்பவார் தனது சமூக வலைத்தளங்களை கையாள தனியார் ஏஜென்சியை நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளார். `கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாமல் இது போன்ற பிரச்னையில் கவனம் செலுத்தவேண்டாம்’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அஜித் பவார் - உத்தவ் தாக்கரே

சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திடீரென பா.ஜ.க-வின் தேவேந்திர பட்நவிஸுடன் இணைந்து அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த ஆட்சி ஓரிரு நாட்கள் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/maharashtra-deputy-cm-plans-to-handle-social-media-with-the-help-of-private-agencies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக