Ad

புதன், 26 மே, 2021

தேனி: அருகருகே ஐ.பெரியசாமி, ஓ.பி.எஸ்! - கொரோனா தடுப்பு பணி ஆலோசனைக் கூட்ட ஹைலைட்ஸ்

தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொள்ள, பெரும்பாலும் தி.மு.க எம்.எல்.ஏக்களுகு அழைப்பு விடுத்ததில்லை. இதை, அப்போதைய தி.மு.க எம்.எல்.ஏக்களே கூறியுள்ளனர். ஆனால், ஆட்சி மாறியதும், காட்சிகளும் மாறின. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் அ.தி.மு.க உட்பட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டன. மாவட்டங்களில் நடைபெறும் அரசின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அக்கூட்டங்களில், அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து வருகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமைக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பங்கேற்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆகிய தி.மு.க எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி, முன்னாள் துணை முதல்வரும் போடிநாயக்கனூர் தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

கூட்டம் துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்து, தனி அறையில் காத்திருந்த ஓ.பி.எஸ்., கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வருகைக்குப்பிறகு, கூட்ட அரங்கிற்குள் வந்தார். அமைச்சர் ஐ.பெரியசாமியும், ஓ.பன்னீர்செல்வரும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். ஐ.பெரியசாமி அமர்ந்திருந்த இருக்கையின் இடப்புற இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ’ஐ.பி’யின் அருகில் சிரித்த முகத்துடன் அமர்ந்தார் ஓ.பி.எஸ். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

போடிநாயக்கனூர் தொகுதியின் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், “போடி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வெளியில் இருந்து வரும் டிரைவர்கள், பயணிகளை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். மாவட்டத்திலுள்ள கூலித் தொழிலாளர்கள், அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள்தோறும் சென்று வருபவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொரோனா நோய்த்தொற்றை மாவட்டம், மாநிலம், நாட்டை விட்டே விரட்ட வேண்டும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆய்வுக் கூட்டம்

அவரைத் தொடர்ந்து பேசிய பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ சரவணன், ”பெரியகுளம் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். நகர்ப் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார். “ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள் இல்லை. தர்மத்துப்பட்டி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் கர்ப்பிணி தாய்மார்கள் அவதிபட்டு வருகின்றனர்” என்றார் ஆண்டிபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ மகாராஜன், கம்பம் தொகுதியின் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், “மாவட்டத்தில் தற்போது ஒதுக்கப்படும் ஆக்ஸிஜன் அளவை, இரு மடங்கு உயர்த்தினால்தான் மருத்துவர்களின் பணிச்சுமை குறையும்” என்றார்.

இக்கூட்டத்தில், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``தேனி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தேவைக்காக, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளது. ஆக்ஸிஜன் அளவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவீடு செய்யப்பட்டு கண்காணித்து வரப்படுகிறது. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்றின் மற்றொரு பாதிப்பான கரும்பூஞ்சை தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்

அப்படியே கரும்பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டால்கூட அதைச் சரிசெய்ய அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது” என்றார். கூட்டம் நிறைவு பெற்ற பின்பு உடனடியாகக் கிளம்பிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். மீடியாக்கள் ”சார்.. சார்..” என அழைத்தும், வழக்கம்போல, கைகளைக் கூப்பி சிரித்துக்கொண்டே கிளம்பி விட்டார். மற்ற மாவட்டங்களைப்போல் தேனியில் ஒரே அ.தி.மு.க எம்.எல்.ஏவான ஓ.பி.எஸ், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என, அதிகாரிகள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் கூட்ட அரங்கில் வந்து அமர்ந்தது அதிகாரிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-corona-prevention-tasks-consultative-meeting-ops-with-i-periyasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக