Ad

புதன், 26 மே, 2021

வாட்ஸ்அப், ட்விட்டர் முடக்கப்படுமா? - மோடி அரசின் திட்டம் என்ன?

உலக அளவில் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் அவரைப் பின்பற்றுகிறார்கள். பிரதமர் மோடியைப் போலவே, பெரும்பாலான மத்திய அமைச்சர்களும் ட்விட்டரில் ஆக்டீவ் ஆக இருக்கிறார்கள். ஆனாலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு இப்போது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ட்விட்டர்

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் தங்கள் கருத்துகளை ட்விட்டர் மூலமாக வெளியிட்டுவந்தாலும், பா.ஜ.க மற்றும் அதன் தலைவர்களை விமர்சிக்கும் கருத்துகளும் தொடர்ந்து ட்விட்டர் மூலமாக தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு படையெடுத்தனர்.

டெல்லியின் எல்லையில் முகாமிட்ட அவர்கள், இன்று வரையிலும் தங்கள் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அவர்கள் பத்திரிகைகளையோ, தொலைக்காட்சிகளையோ நம்பியிருக்காமல் முகநூல், ட்விட்டர், யூட்யூப், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாக தங்கள் செய்திகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்கிறார்கள்.

Also Read: 'WhatsApp' உரையாடல் விவகாரம்: 'இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து வாட்ஸ் அப் வழக்கு!'

விவசாயிகளின் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்ட மத்திய அரசுக்கு, சமூக ஊடகங்கள் மூலமாக விவசாயிகள் மேற்கொள்ளும் பிரசாரம் எரிச்சலை உண்டாக்கியது. அதையடுத்து, சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி புதிய விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கொண்டுவந்தது.

50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் அதன் அலுவலகம் மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பான புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் வசிக்கக்கூடிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் ஆகியவை புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள். பிப்ரவரி 25-ம் தேதி இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அவற்றை செயல்படுத்துவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

விவசாயிகள் போராட்டம்

இதற்கிடையில், கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்பட மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தால் அன்றாட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பிணங்களைப் புதைக்க முடியாத அளவுக்கு மயானங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பிணங்களை எரிப்பதற்கு விறகு வாங்க முடியாத காரணத்தால், கங்கை ஆற்றின் கரைகளில் பிணங்களைப் புதைக்கும் அவலமான காட்சிகளை இந்தியாவில் பார்க்க முடிகிறது.

Also Read: `தி கார்டியன்' இதழ் எடுத்துள்ள துணிகரமான முடிவு... குவியும் உலக மக்களின் பாராட்டுகள்

இரண்டாவது அலை வரப்போகிறது என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்தனர். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தல்களில் முழு கவனத்தையும் செலுத்திவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய ஆட்சியாளர்கள் கோட்டைவிட்டுவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் எழுந்தன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களில் பலரும் இத்தகைய விமர்சனங்களை சமூக ஊடகங்கள் மூலமாக எழுப்பினார்கள். ட்விட்டரில் எழுப்பப்பட்ட இத்தகைய விமர்சனங்கள் உலக அளவில் மோடி அரசின் இமேஜை பாதித்தது.

நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் மட்டுமல்லாமல், லேன்செட் போன்ற உலகப்புகழ்பெற்ற மருத்துவ இதழ்களிலும் கொரோனா தொடர்பான மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தன. இதுவும் மோடி அரசுக்கு உலக அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி

இத்தகைய சூழலில், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான காங்கிரஸ் தயாரித்த ‘டூல்கிட்’ என்று பா.ஜ.க-வினர் எழுப்பிய பிரச்னை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸை ‘மோடி வைரஸ் என்று குறிப்பிடுங்கள்’ என்றும், ‘கும்பமேளா தான் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் என்று தொடர்ந்து சொல்லுங்கள்’ என்றும் தமது கட்சியினருக்கு ‘டூல்கிட்’ ஒன்றை காங்கிரஸ் கட்சி தயாரித்துக் கொடுத்ததாக பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான சாம்பித் பத்ரா ட்விட்டரில் வெளியிட்டார்.

ஆனால், டூல்கிட் என்று சாம்பித் பத்ரா வெளியிட்டது போலியானது என்றும், அப்படி எந்தவொரு டூல்கிட்டையும் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அதையடுத்து, சாம்பித் பத்ராவின் ட்வீட்டை manipulated media என்று ட்விட்டர் நிர்வாகம் டேக் செய்தது. அதாவது, உண்மைக்கு மாறானது, திரிக்கப்பட்டது என்கிற அர்த்தத்தில் அவரது ட்வீட்டை manipulated media என்று ட்விட்டர் டேக் செய்தது. ட்விட்டர் நிர்வாகத்தின் அந்த நடவடிக்கையால், பா.ஜ.க தலைவர்கள் கோபமடைந்தனர்.

Also Read: டூல்கிட் சர்ச்சை: கடுமையாகக் குற்றம்சாட்டும் பாஜக; மறுக்கும் காங்கிரஸ்! - என்ன பிரச்னை?

இதற்கிடையில் ட்விட்டர் நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒரு கடிதம் எழுதியது. அதாவது, காங்கிரஸின் டூல்கிட் என்று சாம்பித் பத்ரா வெளியிட்ட ட்வீட்டை பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பலர் ரீட்வீட் செய்துள்ளனர். எனவே, அவர்களின் ரீட்வீட்களையும் manipulated media என்று டேக் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. அதனால், பா.ஜ.க-வினர் பரபரப்பு அடைந்தனர். பிறகுதான், ட்விட்டர் இந்தியா அலுவலகங்களுக்கு காவல்துறை சென்றது.

டெல்லியிலும் குர்கானிலும் ட்விட்டர் இந்தியா அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்கு சென்று டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிடுவதாக மே 24-ம் தேதி இரவு செய்திகள் பரபரத்தன. அப்போது அமெரிக்காவில் அதிகாலை நேரம். அங்குள்ள ட்விட்டர் தலைமையகத்துக்கு தகவல் பரந்து, தலைமையக அதிகாரிகளும் பரபரப்பு அடைந்தனர்.

மோடி

ட்விட்டர் அலுவலகங்களுக்கு சென்றது வழக்கமான ஒன்றுதான் என்று டெல்லி காவல்துறையினர் சமாளித்தாலும், இது ட்விட்டரை மிரட்டுவதற்கான நடவடிக்கை என்று எதிர்க் கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. கொரோனாவால் தினமும் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸிஜன், மருந்து, தடுப்பூசி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக, இப்படி அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவது ‘வெட்ககரமான செயல்’ என்று சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கட்டாமாக விமர்சித்தார். இது கோழைத்தனமான செயல் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்தார்.

Also Read: விவசாயிகள் போராட்டம்: ட்விட்டர் Vs மத்திய அரசு... என்ன நடக்கிறது?

பா.ஜ.க-வினரோ எதிர்க்கட்சியினரின் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்துதான் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள்.

வாட்ஸ்அப்

‘சிங்கப்பூரில் பரவும் கொரோனா வைரஸை Singapore variant என்று ட்விட்டரில் பலர் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு கூறியவுடன், அதை ட்விட்டர் நீக்கியது. ஆனால், Indian Variant என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று சொன்னால் , அதை ட்விட்டர் நீக்கவில்லை. சிங்கப்பூருக்கு ஒரு சட்டம் இந்தியாவுக்கு ஒரு சட்டமா? இந்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு இணங்கி சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்கிறோம்’ என்கிறது பா.ஜ.க தரப்பு.

விதிகளை அமல்படுத்த நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/will-bjp-government-take-action-against-watsapp-twitter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக