Ad

செவ்வாய், 25 மே, 2021

மகாபெரியவா ஜயந்தி: அனுஷத்தில் அவதரித்த அற்புதர்... வாழ்வில் இனிமையைப் பெருகச் செய்பவர்!

அனுஷம்... ஸ்ரீ மகாலட்சுமியின் அவதாரம் நிகழ்ந்த நட்சத்திரம். நவகிரகங்களில் நியாயாதிபதியான சனிபகவானின் நட்சத்திரம். வாயுபகவானுக்கு உரிய நட்சத்திரமும் அனுஷம்தான். இப்படி அனுஷத்தின் மகிமைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். கடந்த நூற்றாண்டில் அவற்றுக்கெல்லாம் பொன்மகுடம் சூட்டினாற்போல ஓர் அவதாரம் நிகழ்ந்தது.

இந்த உலகின் நன்மைக்காகத் துறவறம் பூண்டு, லட்சோப லட்சம் பக்தர்களைக் காத்து அருள் செய்து அவர்களை ஆன்மிக வழியில் நடத்திய அவதாரம் அது. கண்கண்ட தெய்வம் என்னும் சொல்லுக்கு அடையாளமாக விளங்கிக் காண்பவர்கள் எல்லோரையும் தன் காருண்யத்தால் காத்த அவதாரம். அந்த அவதாரம் வேறு யாரும் இல்லை... தட்சிணாமூர்த்தியின் அம்சமாய் காஞ்சி காமாட்சியின் அருளுருவாய் வாழ்ந்து இன்றும் சூட்சும ரூபமாய் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாபெரியவர்தான் அனுஷத்தில் அவதரித்த அந்த அற்புதர்.

மகாபெரியவா

மகாபெரியவரின் அற்புதங்கள் என்று இன்றுவரை ஏராளமான சிலிர்ப்பூட்டும் சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். காரணம் அவரை தரிசனம் செய்த ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அனுபவம் இருக்கும். சிலர் கண்ட கணத்திலேயே அவரின் ஆசியைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள். அவரின் சொற்களால் சிலர் தம் நோய் தீர்ந்திருப்பார்கள். சிலரோ அவரின் உபதேசங்களின் மூலம் தம் குறைகள் நீங்கப் பெற்றிருப்பார்கள். பாரத தேசம் முழுவதும் தன் பாதங்களால் நடந்து கடந்த அந்த மகானின் பார்வை யார் மீதெல்லாம் பட்டதோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்துகொள்ள ஓர் அற்புதம் இருக்கும், அனுபவம் இருக்கும். அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்றை இப்போது காண்போம்.

ஒருமுறை மகா பெரியவா ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கிராமம். மழைகண்டு நாள்கள் பல ஆகிவிட்டதால் கடுமையான வறட்சி. பெரியவர் என்ன நினைத்தாரோ, அன்றைக்கு அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்தார். உடன் வந்தவர்களுக்கோ பூஜைகளுக்கும் அனுஷ்டானத்துக்கும் கூடத் தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால் பெரியவா பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

கருணைமேகம் அன்று அங்கு பிரசன்னமானதாலோ என்னவோ சீக்கிரமே வெயில்தாழ்ந்து குளுமை படர்ந்தது. விடிவதற்கு முன்பே எழுந்துகொண்ட பெரியவா... நீராடி அனுஷ்டானங்களைச் செய்ய ஏதேனும் நீர் நிலைகள் அருகில் உள்ளனவா என்று விசாரித்தார்.

மகாபெரியவா

அந்த ஊரில் இருப்பதோ ஒரே குளம். அதுவும் கோடையில் வறண்டு ஒரு குட்டைபோல் சிறிது நீர் மட்டுமே தேங்கியிருக்கும் நிலை. அதில்போய் மகாபெரியவா நீராடுவதா என்று பக்தர்கள் தயங்கினர். ஆனால் பெரியவாளோ பரவாயில்லை அந்த நீர் நிலைக்கு வழிகாட்டுமாறு கூறினார்.

ஊர்க்காரர்கள் பதறிப்போயினர். ‘அந்தக் குளத்து நீர் உப்புக்கரிக்கும். வேண்டுமானால் பக்கத்து கிராமத்திலிருந்து நீர் கொண்டுவந்து தருகிறோம்’ என்று வேண்டினார்கள். ஆனால் பெரியவா புன்னகையோடு மறுத்துவிட்டு அந்த உப்பு நீரிலேயே நீராடி அனுஷ்டானங்களை முடித்தார். அந்த நாளுக்கான பூஜைகள் முடிந்ததும் அந்தக் கிராமத்திலிருந்து புறப்பட்டார் மகாபெரியவர்.

Also Read: கோயில் குறித்த புகார்கள் : 'கோரிக்கையைப் பதிவிடுக' எனும் திமுக-வின் புதிய திட்டம் எப்படி செயல்படும்?

சில தினங்கள் கழித்து மகாபெரியவர் முகாமிட்டிருந்த கிராமத்துக்கு உப்புநீர்க் குளம் இருந்த ஊரிலிருந்து சிலர் பெரியவரை தரிசனம் செய்ய வந்தனர். சுவாமிகளைக் கண்டதும் அவர் பாதங்களைப் பணிந்துகொண்டனர். பின்பு தாங்கள் வந்த செய்தியைச் சொன்னார்கள்.

அந்த ஊரில் மகாபெரியவர் நீராடிச் சென்ற ஓரிரு நாள்களில் பெரும் மழை பெய்து ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. அதுவரை உப்புக்கரித்த குளத்து நீர் அதன் சுவை முற்றிலும் மாறி கல்கண்டுபோல் மாறிவிட்டது என்று சொல்லி கண்ணீர் மல்க அவரை வணங்கினர். இப்படித்தான் அவர் கால்தடம் பட்ட நிலங்களில் எல்லாம் அற்புதங்கள் மலர்ந்தன.

இப்படி வாழ்நாள் முழுவதும் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திய அந்த மகானின் அவதார தினம் இன்று. மகாபெரியவரின் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அனுஷ நட்சத்திர நாளில் மகாபெரியவருக்கு வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் அவர் அவதாரம் செய்த வைகாசி அனுஷம் மகா புண்ணியம் நிறைந்த நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது.

இன்று மகாபெரியவா அவதார தினமும் குருபூர்ணிமாவும் இணைந்துவருகிறது. குருவின் அருளிலிருந்தால் குறைவின்றி வாழ்ந்திடலாம். எனவே அவரவர் தங்களின் குருவினை தியானித்து வணங்கி வழிபட வேண்டிய தினம் இன்று. மேலே சொல்லப்பட்ட உப்பு நீர் குளம்போல நம் வாழ்க்கையும் வறண்டு, சுவையற்று இருக்கலாம். குருவின் கருணை மழை நம்மீது பொழிய ஆரம்பித்தால் நம் வாழ்க்கையும் சுவைமிக்கதாக வளம் நிரம்பியதாக மாறிவிடும். அப்படி குருவின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த குருபூர்ணிமா திகழ்கிறது.

இந்த நாளில் தவறாமல் குருபூஜை செய்து மகிழ்வோம். வாழ்வில் இருக்கும் உவர்ப்புகளும் கசப்புகளும் நீங்கி இனிப்பும் இனிமையும் பொங்கிப் பெருகும்.


source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-the-significance-of-mahaperiyava-jayanthi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக