Ad

செவ்வாய், 25 மே, 2021

கோயில் குறித்த புகார்கள் : 'கோரிக்கையைப் பதிவிடுக' எனும் திமுக-வின் புதிய திட்டம் எப்படி செயல்படும்?

24.5.21 அன்று இந்து அறநிலையத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘கோரிக்கையைப் பதிவிடுக’ என்னும் அம்சம் பலராலும் வரவேற்கப்படுகிறது.

பல காலமாகவே இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு புகார்கள் மக்களிடையே இருந்துவருகின்றன. கோயில் சொத்துகளை நிர்வகிப்பது, கோயில் பராமரிப்பு, கட்டண தரிசனம் குறித்த புகார்கள், பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படாத நிலை எனப் பல்வேறு பிரச்னைகளை பக்தர்களும் ஆன்மிக அமைப்புகள் எழுப்பிவருகின்றன. அண்மையில் ஈஷா யோகா சத்குரு, ‘கோயில் அடிமை நிறுத்து’ என்று பெயரிட்டு ஓர் இயக்கம் தொடங்கி #Freetntemples #கோவில்அடிமைநிறுத்து என்னும் ஹாஷ்டேக்களை உருவாக்கிப் பரவலாக்கப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு ஆலோசனைக் கூட்டம்

மே 19-ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியதோடு, கோயில்களின் சொத்துவிவரங்களை இணையத்தில் வெளியிட அறிவுறுத்தினார். இந்த அறிக்கை அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில்தான் சேகர்பாபு 24.5.21 அன்று சேகர்பாபு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் துறை சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும் அதன் ஒருபகுதியாக அறநிலையத் துறையின் சார்பில் ‘கோரிக்கையைப் பதிவிடுக’ என்னும் ஒரு புதிய இணையவழித் திட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது என்ன கோரிக்கையைப் பதிவிடுக?

கோயில் சார்ந்த புகார்களை மக்களிடம் பெறுவதற்காக இந்து அறநிலையத் துறை உருவாக்கியிருக்கும் வசதியே ‘கோரிக்கையைப் பதிவிடுக.’ இந்து அறநிலையத்துறையின் இணைய தளத்தில் ( https://ift.tt/34w7nal ) இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இந்த வசதி சுட்டிக்காட்டும் சிம்பலோடு காணப்படுகிறது. அதைக் க்ளிக் செய்து உள்நுழைந்தால் ஒரு படிவம் தோன்றும். அதில் பதிவிடுபவரின், மாவட்டம், வட்டம், பெயர், மின்னஞ்சல் (கட்டாயமில்லை) கைபேசி எண் (கட்டாயம்) ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.

அதன்பின் கோயில்கள் சார்ந்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவிடலாம். கோரிக்கை அல்லது புகார்களுக்கு ஆதாரமான கோப்புகளை இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சம், புகார் பதிவானதும் உடனடியாக பதிவு செய்தவரின் தொலைபேசி எண்ணுக்குப் புகார் பதிவு எண் போய்விடும். அந்தப் புகார் உடனடியாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பபட்டு 60 நாள்களுக்குள் தீர்வு காணப்படும்.

அறுபது நாள்களுக்குப் பின் பதிவிட்டவர் தன் புகார் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அந்தப் புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம். இது பயன்படுத்த எளிதாகவும் அனைவரும் பதிவிட வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு திருக்கோயில்களை மேம்படுத்த உதவும் என்கிறது அறநிலையத்துறை.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமைச்சரின் நேரடி கவனத்துக்கும் சென்று ஆய்வுமேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை

இந்த அறிவிப்புக்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்திருக்கும் நிலையில் அறுபது நாள்களில் புகார்கள் தீர்க்கப்படுகின்றனவா, பக்தர்களின் கோரிக்கைகளுக்கு விடை கிடைக்கின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/spiritual/temples/dmk-government-creates-new-window-for-devotees-to-register-complaints

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக