Ad

வியாழன், 13 மே, 2021

மதுரை: `இளைஞர்களை தன்னார்வலர்களாக்கும் திட்டம்!’ - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

"மதுரை நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அவர்களை தன்னார்வளர்களாக மாற்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா முன்கள பணியாளர்கள்

இது சம்பந்தமாக மத்திய சுகாதார செயலாளருக்கு எழுதியுள்ள கடிதம் பற்றி சு.வெங்கடேசனிடம் பேசினோம்,

"நாடு முழுவதும் அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களின் முயற்சி, மக்களுக்கு நிம்மதியை கொண்டு வரும். கோவிட் இரண்டாம் அலை 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர்.

சு.வெங்கடேசன்

இதை மனதில் கொண்டு இந்த வயதிற்குள் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். முன்களப் பணியாளர்கள் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஓராண்டு நீண்ட பேரிடர் பணியில் இத்தகைய மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானதுதான்.

மத்திய, மாநில அரசின் பணிகளில் உதவ, முன்னெச்சரிக்கை செய்திகளை மக்களிடம் சேர்த்து விழிப்புணர்வை உண்டாக்க எனது நாடாளுமன்ற தொகுதியிலுள்ள இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

அவர்கள் இரண்டாம் நிலை சுகாதார ஆர்வலர்களாக செயல்படுவார்கள். அலுவலர்களுக்கும், கோவிட் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுவார்கள்.

கொரோனா தடுப்பூசி

மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பது, உணவு வழங்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவது, நிலைமையை கண்காணிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்புகளைப் ஏற்படுத்துவது, அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது என செயல்படுவார்கள்.

தன்னார்வலர்களாக செயல்படவுள்ள என் தொகுதி இளைஞர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கேட்டுள்ளேன். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் தன்னார்வ இளைஞர்கள் 30,000 பேருக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்த என் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்குவேன். அதேநேரம், எல்லோருக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒட்டுமொத்த மக்களும் பயன் பெற வேண்டும் என்பதையும் மத்திய சுகாதார செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/politics/su-vengatesan-demand-letter-to-union-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக