Ad

வியாழன், 27 மே, 2021

தேனி: 66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

`டவ்தே புயல்’ மற்றும் `வளிமண்டல மேலடுக்கு சுழற்சி’யின் காரணமாகத் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல், கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை பெய்ததால் அணையின் நீர் மட்டம் 130 அடி வரை உயர்ந்துள்ளது.

அதனால் விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டடுள்ளது. இதன் காரணமாகவும், வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும் அணையின் நீர் மட்டம் 66 அடியை நெருங்கியுள்ளது. வழக்கமாக, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம், 66 அடியை எட்டும்போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

கடல் போலக் காட்சி அளிக்கும் வைகை அணை

68.50 அடியை எட்டும்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும். அக்னி நட்சத்திர காலத்திலும் தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர் மட்டம் 41.98 அடியாக இருந்தது.

தற்போது அணையின் நீர் மட்டம், 66 அடியை நெருங்கியுள்ளதால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடும் சூழல் நிலவி வருகிறது. வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் மதுரை மாவட்டத்தின் முதல் போக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க, விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, வரும் ஜூன் 4-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. விநாடிக்கு 700 கன அடி முதல் தேவைக்கு ஏற்ப 2,100 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும். முதல் போக பாசனத்துக்காக 2 மாதங்கள் வரையிலும், அதைத் தொடர்ந்து இரண்டாம் போக பாசனத்துக்காக மார்ச் மாதம் வரையிலும் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

வைகை அணை

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 1.36 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போகப் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/agriculture/flood-alert-given-to-shore-dwellers-as-vaigai-dam-reaches-66-ft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக