Ad

வெள்ளி, 7 மே, 2021

`மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் திட்டமா?!’ - ஜே.பி.நட்டா பதில்

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகினர். கடந்த மே 2-ம் தேதி மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 சட்டமன்றத் தொகுதிகளில் 213 தொகுதிகளைப் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக 77 இடங்களை மட்டுமே பிடித்து தோல்வியடைந்தது. எனினும், மம்தா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சினருக்கும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் மூண்டது. இந்தச் சம்பவத்தின் இறுதியில் இருதரப்பிலும் சேர்த்து 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாற்றுக்கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜி

இது குறித்து நடந்தவற்றை அறியவும், பாதிக்கப்பட்ட பாஜக-வினரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்தார் பாஜக-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. பாதிக்கப்பட்ட கட்சியினர் மற்றும் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த பின்னர், புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குத் தொடர்ச்சியாக பதில் அளித்த நட்டா, “மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் 14 பாஜக தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சி மாற்றத்தால் சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரையிலான மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளைவிட்டு வெளியேறி அஸ்ஸாம் போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர்” என்றார்.

மேலும், “இந்தக் கலவரம், 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நவகாளி படுகொலையை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக, தெற்குப் பகுதியின் 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள கேனிங் பூர்பா தொகுதியில் பாஜக தொண்டர்கள் மீதான வன்முறை மற்றும் கிராமங்கள் சூரையாடப்பட்டது" என்று குறிப்பிட்ட அவர், அங்குள்ள மக்கள் "கடந்த ஆண்டு, ஆம்பன் சூறாவளியைப் போன்று, இந்த ஆண்டு மம்தாவை எதிர்கொண்டுள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், மேற்கு வங்கத்தில் அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவை சுமத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் பாஜகவுக்கு இருக்கிறதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நட்டா, “முதலில் ஓர் அறிக்கை ஆளுநரால் உருவாக்கப்படும். அது மத்திய முகவர் (Central agencies) மற்றும் உள்துறை அமைச்சகத்தால் (Ministry of home affairs) பகுப்பாய்வு செய்யப்படும். அதன் பின்னர்தான் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. எனவே, அவர்கள் முடிவெடுப்பதுதான்" என்றார்.

நட்டா

மேலும், பிரிவு 356-ன் கீழ், ஒரு மாநில அரசு அரசியலமைப்பு விதிகளின்படி செயல்படாவிட்டால், மத்திய அரசு மாநில இயந்திரங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியும். பாஜக-வைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தின் மூலம், 356 பிரிவை அமல்படுத்துவது ஒரு பொருத்தமான வழக்காக இருக்கும் என்றாலும், நாங்கள் ஜனநாயகரீதியாகப் போராடும் மக்கள். ஜனநாயகப்படியே நடப்போம்" என்று உறுதியாகத் தெரிவித்தார் நட்டா.

Also Read: ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிரடி! - மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்திய மம்தா!



source https://www.vikatan.com/government-and-politics/politics/jp-nadda-slams-mamta-over-the-riots-after-the-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக