Ad

செவ்வாய், 25 மே, 2021

`எங்கள் கலாசாரத்தையும், வாழ்வியலையும் அழித்து விடாதீர்கள்!’ #SaveLakshadweep போராட்டமும் பின்னணியும்

கடந்த 2019-ல் இந்தியாவில், குடியுரிமை திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தி அது தேசிய அளவில் சர்ச்சையாக வெடித்தது போல தற்போது லட்சத்தீவில் மேம்பாடு ஆணையம் அமைப்பதற்கு புதிய வரைவு ஒன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், அங்கு வாழ்ந்து வரும் மக்களின் கலாசாரத்தை கெடுக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி உடனே இதைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர் பிரஃபுல் கோடா பட்டேல்.

யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?

மோடியுடன் பிரஃபுல் கோடா பட்டேல்

லட்சத்தீவுகளின் தற்போதைய நிர்வாகி தான் இந்தபிரஃபுல் கோடா பட்டேல். கடந்த 2020-ம் ஆண்டு லட்சத்தீவுகளின் முன்னாள் ஆட்சியாளர் தினேஷ்வர் ஷர்மாவின் திடீர் மரணத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டார் பிரஃபுல் கோடா பட்டேல். அதிகாரத்தைப் பெற்ற நாள் முதல் லட்சத்தீவுகளில் இவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையாகவும், மக்களுக்கு விரோதமாகவும் இருப்பதாக அதிருப்தி நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்ட ஒழுங்குமுறையானது பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

பிரஃபுல் கோடா பட்டேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அதுமட்டுமலாது மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வந்த காலத்தில் பிரஃபுல் கோடா பட்டேல் அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு டையூ & டாமன் யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்ற இவர் தற்போது இரு யூனியன் பிரதேசங்களுக்கும் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.

யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக இந்திய ஆட்சி பணியாளர்களே ஆட்சியாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை விடுத்து பிரஃபுல் கோடா பட்டேல் ஆட்சியாளராக இரு பிரதேசங்களுக்கும் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேபோல், பிரஃபுல் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே இது போன்ற தெளிவற்ற முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து வருகிறார் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

புதிய சட்டங்கள் சொல்ல வருவது என்ன?

லட்சத்தீவு

லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டவரைவு ஒழுங்குமுறையை பொறுத்தவரையில், சுரங்கம், நெடுஞ்சாலை உள்ளிட்ட நகர மேம்பாட்டு பணிகளுக்காக தேவைப்படும் பட்சத்தில், அங்கு வசித்து வரும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மிக சொற்பமான மக்கள் தொகை கொண்ட தீவில் ‘நெடுஞ்சாலைக்கான அவசியம் என்ன?!’ என்ற அங்குள்ள மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

லட்சத்தீவுகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர்(கிட்டதட்ட 96%) இஸ்லாமியர்கள் தான் வசித்து வருகின்றனர். அதனால், கலாசார மற்றும் மத நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு அங்கு ஆரம்பம் முதலே மது விற்கவும், வாங்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த புதிய சட்டத்தின் மூலம் பலருக்கு மது உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாத்துறை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விலங்குகள் நல பாதுகாப்பு சட்டம் 2021ன் கீழ், அங்கு மாட்டு இறைச்சிகளை விற்கவும், வாங்கவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் உணவு சுதந்திரத்தில் தனது சட்டத்தின் மூலம் லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் தலையிடுவதாக கூறுகின்றனர்.

அங்குள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்தில், இரண்டிற்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோர் அங்குள்ள பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2019 - 2020ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வின் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசங்களிலேயே லட்சதீவிகளில் தான் குறைவான மக்கள்தொகை உள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

லட்சத் தீவு

இந்த சிக்கல்களுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் ஆட்சியாளர் தினேஷ்வர் ஷர்மாவின் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக்கப்படியான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக விதித்திருந்தனர். அதனால் தான் கொரோனாவின் முதல் அலையின் சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கூட, அங்கு ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை.

ஆனால், பிரஃபுல் நிர்வாகத்துக்கு வந்த பிறகு அதில் அவர் காட்டிய அலட்சியத்தாலேயே தற்போது ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பினராயி விஜயன் முதல் ப்ரித்விராஜ் வரை - வலுக்கும் எதிர்ப்பு

கேரளா - லட்சதீவுகளுக்ககுமிடையில் நெடுங்காலமாக நல்லுறவு பேணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த விவகாரத்தில் கேரளா முதலில் முன்வந்து ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. பிரஃபுல் படேலின் சர்வாதிகாரத்தை நிறுத்தக்கோரியும், குடியரசுத்தலைவரை உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரியும் கேரளா முதல்வர், எம்.பி.கள் துவங்கி நடிகர், நடிகைகள் வரை லட்சத்தீவுகளின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், கடந்த திங்களன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், “லட்சத்தீவுகளில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்களால் எழுந்துள்ள போராட்டங்கள் மிகவும் மோசமாக உள்ளது. இதனை குடியரசுத் தலைவர் உடனடியாக கருத்தில் கொண்டு இதற்கு முடிவு எட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பினராயி விஜயன்

அதேபோல் கேரளா மாநிலங்களை உறுப்பினரான எலமாரம் கரீம், “ஆரம்பம் முதலே, பிரஃபுல் படேல் எடுத்து வரும் முடிவுகளானது அங்கு வாழும் மக்களின் கலாசாரத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எதிரான மனநிலையிலேயே இருந்து வருவதை பார்க்க முடிகிறது. இச்சட்டத்தால் வருங்காலங்களில் இங்கு வாழ்ந்து வரும் மக்களின் கலாசாரமும், வாழ்வியலும் சீர்குலையும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக இதில் தலையிட்டு இச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்” என்று ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதேபோல், சில மாநிலங்களவை உறுப்பினர்களான வேணுகோபால், பினாய் விஸ்வம் உள்ளிட்ட சிலர், “மக்களுக்கு ஒருபோதும் விருப்பமில்லாத சட்டங்களை படேல் தனது தன்னிச்சையான முடிவால் திணிக்கப் பார்க்கிறார். ஜனாதிபதி இதற்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளனர்.

ப்ரித்விராஜ்

நடிகர் ப்ரித்விராஜ், “நெடுங்காலமா அமைதியாக இருந்து வரும் வாழ்விடத்தில் மேம்பாடு என்கிற பெயரில் அதன் தொன்மையை சீர்குலைப்பது எந்த வகையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

லட்சத்தீவுகளில் உள்ள மக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலிருந்தே தங்களது போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். லட்சத்தீவு மாணவர் அமைப்பு, கேரளா மாணவர் அமைப்பு, இந்திய தேசிய மாணவர் அமைப்பு ஆகியவை இதற்கு எதிராக தங்களது குரலை எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.



source https://www.vikatan.com/news/india/save-lakshadweep-whats-happening-in-the-island

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக