Ad

வெள்ளி, 14 மே, 2021

`மாறனுக்கு தண்டனையாகக் கிடைத்ததுதான் காலா பட வாய்ப்பு!' - பகிரும் மல்லை சத்யா

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லத்தனம் எனப் பல வேடங்களில் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகர் மாறன். கொரோனா பாதிப்பால் மூன்று நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கில்லி படத்திலும், தலைநகரம் படத்தில் வடிவேலுவின் `நாய்சேகர்' காமெடியிலும் மாறனை ரசிக்காதவர்கள் யாருமில்லை. மாறன் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாறன் மறைவை அடுத்து அவரது நெருங்கிய நண்பரும் ம.தி.மு.க துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டார். கடிதத்தில், ``என் உடன் பிறவா சகோதரனின் மரண செய்தி பேரிடியாக வந்து விழுந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மாறனின் மறைவை ``விடியும் வரை காத்திரு என்றேன் விடியாமலே போய் விட்டது” என வேதனையுடன் பதிவு செய்திருந்தார். மல்லை சத்யா அவர்கள் அவரது அன்புத் தம்பியின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

மல்லை சத்யா

``மாறன் என் பால்ய காலத்திலேயே அறிமுகமாகிய நண்பன்; மிகவும் துடிப்பான இளைஞன். படிப்பு முடிந்து மாமல்லபுரத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டபோது என்னுடன் வந்த இளைஞர்களில் மாறனும் ஒருவன். மாறன் கைப்பந்து, கால்பந்து, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்.

பல அரசியல் நிகழ்வுகளில் என்னுடன் கலந்து கொண்டவர், பின் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்கத் தொடங்கினார். எவ்வளவு உயரம் சென்றாலும் எல்லா இடங்களிலும் மேடைகளிலும் `சத்யா அண்ணா' என என்னைக் குறித்துப் பேசுவார்.

மாறன் காலா படத்தில் நடிக்க விரும்பியபோது அவனை நண்பர் ரஞ்சித்திடம் அறிமுகப்படுத்தினேன். அவரிடம் நடித்துக்காட்டி லுக் டெஸ்ட் எடுத்தனர். இவருக்கு ஆகஸ்ட் மாதம் என ரிகர்சல் தேதி சொல்ல அதை அக்டோபர் என நினைத்துக்கொண்டு மலேசியா சென்றுவிட்டு செப்டம்பரில் திரும்பி வந்தான். வரும்போது ரிகர்சல்கள் முடிந்து ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததை எண்ணி என்னிடம் கண்ணீர்விட்டு அழுதான்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் மாறன்

``வாழ்க்கையில் எப்போதாவது மட்டும் கிடைக்கும் இது போன்ற வாய்ப்பைக் கெடுத்துகிட்டாயே” என அவனைத் திட்டிவிட்டு ``இவருக்கு தண்டணையாக ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என ரஞ்சித்திடம் வேண்டிக் கேட்டேன். ரஞ்சித் சேர்த்துக் கொண்டதால் காலா படத்தில் நடித்தான். ரஜினியை போலீஸ் மிரட்டும்போது முதல் ஆளாக நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பவராக அசத்தி இருப்பான். எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் உதவிகரமாக இருந்த தம்பி. செங்கல்பட்டு மருத்துவமனையில் என் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்னால் அவரைக் கவனித்து கொள்ள முடியாமல் போனது. அப்போது மாறன் தன் சொந்த அன்னையைக் கவனித்துக்கொள்வது போல தினமும் சென்று கவனித்து வந்தான்.

மாறனைப் போன்ற பாசமான சகோதரனை எங்கும் பார்க்க முடியாது. மாறன் உடனிருக்கும்போது என் வேலைகளில் எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட முடியும். குறிப்பறிந்து செயல்படும் ஆற்றல் உடையவன். பிரசாரத்துக்குச் செல்லும்போது நண்பர்களுடன் இணைந்து எனக்கு மட்டுமன்றி எல்லாருக்கும் சரியாக சிற்றுண்டி வழங்கும் மனது அவனுடையது. 1998-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்துக்காகப் பேரணி நடத்தியபோது நான் இளைஞரணிச் செயலாலராக இருந்தேன்.

மல்லை சத்யா

இரண்டு நாள்கள் பேரணியிலும் ஜிப்பாவும் சுருட்டை முடியுமாக என் பின்னே வந்துகொண்டிருப்பான். அந்த நேரத்தில் பலரும் யார் இவர் என என்னிடம் கேட்கும் அளவு மிடுக்காக இருப்பான். பல முறை வெளியூர்களுக்கு என்னுடன் ரயிலில் வந்துவிடுவான். இனி அவன் இல்லை என நினைப்பது மிகுந்த வலியும் வேதனையும் அளிக்கிறது.

நேற்றுக்கு முன் தினம் அவரிடம் பேசும்போது, `உடல் நிலை சரியில்லை என்றவுடன் என்னை அழைத்துப் பேசிருக்கலாமே, ஏன் மறைத்தாய்?' எனக் கேட்டதற்கு, ``பெரிய பிரச்னை இல்லை அண்ணா, மாத்திரை சாப்பிட்டிருக்கிறேன் குணமாகிவிடுவேன்” என நம்பிக்கையுடன் பேசினான்.

``எச்சரிக்கையுடன் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரு” எனக் கூறினேன். ஆனால், மருத்துவர் மாறனுக்கு 75% நுரையீரல் பாதித்துவிட்டதாகக் கூறினார். இரு நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் நலம் பெறுவார் எனக் கூறினார். பின் மாலை 7 மணிக்கு ஆக்சிஜன் வழங்கும் முகமூடியைக் கழற்றிவிட்டு தண்ணீர் வேண்டும் எனக் கத்தியுள்ளார். அதனால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து வலிப்பு வந்துள்ளது. பின் விடியற்காலையில் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது.

தலைவர் வைகோ அவனது இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தார். நேற்று மாறனின் காதல் மனைவி கிளாரா மாறனிடம் ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்தில் மாறன்

சினிமாக்கார்களும் மற்ற பொது வாழ்வில் இருப்பவர்களும் தங்களது இமேஜ் பற்றிக் கவலை இல்லாமல் தொற்று நோய் பற்றி வெளியில் கூற வேண்டும். இதை ஒரு குறையாக எண்ணும் எண்ணம்தான் இன்று மாறன் நம்மைப் பிரிய காரணம். யாரும் தொற்று நோயைக் குறையாக எண்ண வேண்டாம். அரசு கூறுகின்ற வழிமுறைகளைச் சரிவரப் பின்பற்ற வேண்டும். சென்ற ஆண்டு மருந்துகள், சரியான சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. இந்தாண்டு தடுப்பூசியும் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நிலையிலும் மக்களின் அலட்சியத்தால் இழப்புகள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. தினமும் காலையில் இன்று யாரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்கள் எனச் சிந்திக்க கூடிய நிலையில் இருக்கிறோம். மாறனைப் போன்றவர்களின் இழப்பு இன்னும் வலிக்கச் செய்கிறது” என மல்லை சத்யா உருக்கத்துடன் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/cinema/mallai-sathya-shares-his-fond-memories-of-actor-maran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக