Ad

வியாழன், 27 மே, 2021

மதுரை: `அதிமுக வென்ற தொகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் பாரபட்சம்!’ - எம்.எல்.ஏ-க்கள் புகார்

மதுரை மாவட்டத்தில் அதிமுக வென்ற தொகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டரிடம் மனு

முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் இணைந்து மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், "மதுரை மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய காய்ச்சல் முகாம் நடத்திட வேண்டும்.

தடுப்பூசி போடுவதிலும் , நோய் தடுப்பு நடவடிக்கையிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

கிராமப்புறங்களில் அம்மா கிளினிக் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி அவை மூடப்பட்டு உள்ளது. அதை மீண்டும் திறக்க வேண்டும்.

கலெக்டரிடம் கோரிக்கை வைக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

வைகை அணையில் நீர்மட்டம் தற்போது 67 அடியாக உயர்ந்துள்ளது. அதனால், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58-ம் கால்வாயில் தண்ணீர் திறந்திடவேண்டும். இதன் மூலம் 2,285 ஏக்கர் நிலங்களில் வேளாண்மை பணிகளுக்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் பயனுள்ளதாக அமையும்' என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ``இரவு பகல் பாராமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். மதுரை மாவட்டத்தில் கொரோனா  அசுர வேகத்துடன் பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் மே 7 முதல் நோய்த்தொற்று நாள்தோறும் 1,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி வருகிறது. இது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

குறிப்பாக, நோய்தொற்று அடையாளம் தெரியாமலே கிராம மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். மக்களின் உயிரைக் காத்திட நோய்த்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்து 20 நாட்கள் ஆகிறது என்றாலும், எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றிய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. மேலும் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிக அளவில் மக்கள் கூடியதன் பாதிப்பை ஒருவாரம் கழித்துதான் அறியமுடியும்.

கொரோனா தடுப்பு பணியில் மதுரை மாவட்டத்தில் அதிமுக வென்ற 5 தொகுதிகளில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தடுப்பூசி, ஆம்புலன்ஸ் வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் ஆகியவற்றை செய்திட வேண்டும். அதேபோல் கிராமம்தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்திட வேண்டும். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மூடப்பட்டுள்ள அம்மா கிளினிக்குகளை மீண்டும் திறக்க வேண்டும்.

முதல் அலையில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டது. அதில் உயிர் பலி அதிகமாகவில்லை.  தேவையான மருத்துவர்கள், உயிர்காக்கும் மருந்து மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/admk-mlas-complaint-against-government-in-corona-preventing-measures

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக