Ad

வியாழன், 27 மே, 2021

Covid Questions: தடுப்பூசி போட்ட சில நாள்களில் டிடி ஊசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

Covid question: நான் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டேன். இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பதினைந்து நாள்கள் கழித்து ஒரு ஆக்ஸிடன்ட்டில் எனக்கு அடிபட்டது. அதற்காக டிடி ஊசி போடப்பட்டது. அது ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்துமா?

- விஜய்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

``நீங்கள் உங்களுக்கு விபத்து நடந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் நாய் கடித்துவிட்டதாக ஒரு நபர் சிகிச்சைக்கு வந்தார். கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டு 18 நாள்களில் அவருக்கு நாய்க்கடி. அதில் அவருக்கு பலத்த காயம். வழக்கமாகப் போடும் டெட்டனஸ் ஊசியோடு ஆன்டி ரேபிஸ் ஊசியையும் அவருக்குப் போட வேண்டியிருந்தது. ரண ஜன்னியும் உயிரைப் பறிக்கலாம். கடித்தது வெறிநாயாக இருந்தால் அதுவும் உயிருக்கே ஆபத்தானது. எனவே, அவருக்கு இரண்டு ஊசிகளையும் போட்டு அனுப்பினோம்.

சாலை விபத்துகளும் இப்படித்தான். அந்த விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரத்த இழப்பு அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எலும்பு முறிவு ஏற்பட்டிருந்து அது சரிசெய்யப்படா விட்டால் எலும்புகள் மீண்டும் சேராது. ஆஸ்டியோமைலட்டிஸ் எனும் தொற்றுக்குக் காரணமாகலாம். எலும்பு உடைந்த முதல் மூன்று நாள்களுக்குள் அதைச் சேர்க்கச் செய்யப்படும் சிகிச்சையின் பலனுக்கும் பத்து நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் சிகிச்சைக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.

முதலில் கோவிட் தடுப்பூசியைப் பார்த்து இந்த அளவு பயப்படுவதே தேவையற்றது. போலியோ டிராப்ஸ் எடுத்துக்கொண்டாலோ, டிடி தடுப்பூசி எடுத்துக்கொண்டாலோ என்ன செய்வோமா அப்படித்தான் இதையும் அணுக வேண்டும். ஆரம்பத்தில் இந்தத் தடுப்பூசிகளைப் பற்றியும் அவற்றின் செயல்திறன் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை என்பதால் அவை குறித்து நமக்கு பயமிருந்திருக்கலாம். ஆனால், இப்போது 20 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இன்னும் சில நாள்களில் அதை நம் வீடு தேடி வந்து போடக்கூடிய நிலை வரும். எனவே தடுப்பூசி குறித்த தேவையற்ற பயத்தைத் தவிருங்கள்.

கொரோனா தடுப்பூசி

Also Read: Covid Questions: தற்போது போடப்படும் தடுப்பூசிகள் உருமாறும் வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

ஒரு தடுப்பூசிக்கும் இன்னொரு தடுப்பூசிக்கும் இடையிலோ, இரண்டு தடுப்பூசிகளும் போட்ட பிறகோ ஒருவருக்கு வரும் வழக்கமான அனைத்து உடல்நலப் பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளித்துதான் ஆக வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 'டைக்ளோஃபெனாக்' (Diclofenac) எனப்படும் வலி ஊசி போடுவதில் மட்டும்தான் மருத்துவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். அதில் கொஞ்சம் ரிஸ்க் இருப்பதால் மருத்துவர்களாகிய நாங்கள் தவிர்க்கிறோம். மற்றபடி உயிர்காக்கும் எந்தச் சிகிச்சையையும் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டதைக் காரணம் காட்டி தவிர்க்கவே கூடாது. அந்த விஷயத்தில் மருத்துவர்களின் முடிவுக்கே விட்டுவிட்டு அவர்களை முழுமையாக நம்புவது மட்டும்தான் புத்திசாலித்தனம். சிகிச்சைகளைப் பொறுத்தவரை எது தேவை, எது தேவையில்லை என்பதில் உங்களைவிட மருத்துவர்கள் தெளிவாகவே இருப்பார்கள். கவலை வேண்டாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/is-it-safe-to-take-tt-injection-few-days-after-covid-vaccination-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக