கொரோனா பேரிடர் இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்த தமிழக அரசு, அதில் பெரும் முயற்சியாக வெளி மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜனை கொண்டு வருகிறது. இதற்காக ரயில்வே துறையினர் தமிழக அரசுக்கு உதவி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை 24 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி சாதனை படைத்துள்ளது தெற்கு ரயில்வே.
அதிலும் முக்கியமாக தென் மாவட்டங்களுக்கு 3 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கியுள்ளது. 3-வது ரயில் நேற்று மதுரை வந்து சேர்ந்தது.
இதுபற்றி நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்ட அலுவலர், ``ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. தென் மாவட்டங்களுக்கு வரும் 3-வது ரயில் இது.
இதற்காக மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் டேங்கர் லாரிகள் இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக அமைக்கப்பட்டது.
இது தமிழகத்திற்கு வந்த 24 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1,393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தண்டையார்பேட்டை, திருவள்ளூர், கோவை மதுக்கரை, தூத்துக்குடி மீளவிட்டான், மதுரையில் வாடிப்பட்டி, கூடல்நகர் ரயில் நிலையங்களில் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது." என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை ரயில்கள் மூலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வேத்துறை தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 969 டன் ஆக்ஸிஜனுடன் 12 ரயில்களை இயக்கி ரயில்வேதுறை இந்த கோவிட் பேரிடர் காலத்தில் மக்களுக்கு சேவையாற்றி உள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/oxygen-rail-service-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக