கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பலரும் இறக்கும் அவலம் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. மக்களும் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இந்தநிலையில், புனே மாவட்டத்தில், பாராமதி அருகிலுள்ள முதாலே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவருக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சகுந்தலா தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், முதுமை காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் முடிவு செய்தனர். பாராமதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குப் படுக்கைக்கு ஏற்பாடு செய்ய முயன்றனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல காருக்காகக் காத்திருந்தனர். அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக சகுந்தலா கீழே விழுந்துவிட்டார். அதன் பிறகு அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி உறவினர்கள் சகுந்தலாவைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர்.
இறுதிச் சடங்குக்கான வேலைகள் தயாராகிக்கொண்டிருந்தன. உறவினர்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். மூதாட்டியின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக பாடையில் ஏற்றப்பட்டது. அப்போது திடீரென இறந்ததாகக் கருதப்பட்ட மூதாட்டி அழ ஆரம்பித்தார். அதோடு அந்த மூதாட்டி கண்ணையும் திறந்தார். இதனால் ஆச்சர்யமடைந்த உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் பாராமதி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மூதாட்டி சிறிது நேரம் கண் விழிக்காமல் இருந்திருந்தால் உயிரோடு எரித்திருப்பார்கள். இந்தச் சம்பவத்தை போலீஸாரும் விசாரணை செய்து உறுதிப்படுத்தியிருக்கின்றனர் .
source https://www.vikatan.com/news/india/in-maharastra-76-year-old-covid-positive-woman-declared-dead-wakes-up-minutes-before-cremation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக