Ad

வியாழன், 27 மே, 2021

"இன்ஜினியரிங் படிப்பை இனி தமிழ் உட்பட 8 மொழிகளில் படிக்கலாம்!"- ஏஐசிடிஇ அனுமதி

தொழிற்கல்விகளான இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளை பொதுவாக இப்போது ஆங்கிலம் வழியாகவே மட்டுமே படிக்க முடிகிறது. கிராமங்களில் தாய்மொழியில் 12வது வகுப்பு வரை படித்த மாணவர்கள் தொழிற்கல்வியில் சேரும் போது கொஞ்சம் திணறத்தான் செய்கின்றனர். இதையடுத்து தொழிற்கல்வியையும் தாய்மொழியில் படிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஜெர்மன், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கல்வி முழுக்க அவர்களின் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று செய்ய ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது.

Engineering students

இதனால் இத்திட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இப்போது அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) இன்ஜினியரிங் படிப்புகளை தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் வரும் கல்வியாண்டில் இருந்தே தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் அனில் அளித்த பேட்டியில், "தாய்மொழியில் கற்றுக்கொள்வதால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். வரும் ஆண்டில் மேலும் 11 மொழியில் இன்ஜினியரிங் படிப்புகளைத் தொடங்க அனுமதிக்க இருக்கிறோம். இதற்கான பாடப்புத்தகங்களை அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் வழங்கும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இம்முடிவுக்கு கல்வி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இம்முடிவு மூலம் மாணவர்கள் பாடங்களை எளிதில் படித்து புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருமா என்று தெரியவில்லை. பாடப்புத்தகங்கள் அனைத்தையும் தாய்மொழியில் மொழி பெயர்க்க வேண்டும். எனவே அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் அமலுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையே ஐ.ஐ.டி.தொழிற்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ (அட்வான்ஸ்) நுழைவுத்தேர்வு காலவரையற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

இது குறித்து சரியான நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு குறித்தும் மத்திய அரசு இதுவரை எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் சாதித்து வருகிறது. இதனால் ஓர் ஆண்டுக்கும் மேலாக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/education/now-you-can-study-engineering-in-tamil-and-other-regional-languages-says-aicte

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக