Ad

வியாழன், 13 மே, 2021

`கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 6-8 வாரங்கள் ஊரடங்கு வேண்டும்’- ஐசிஎம்ஆர் தலைவர் சொல்வது என்ன?

கோவிட் 19 நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. வேகமெடுத்துவரும் நோய்ப் பரவலால் பல மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கிறது. முதலாம் அலையைத் திக்கித் திணறிச் சமாளித்த இந்தியா, தற்போது மிக அதிக பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் சந்தித்துவருகிறது. வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கிக்கொண்டிருப்பதால், மருத்துவர்களும் சுகாதாரத்துறையினரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கை நடைமுறைக்குக் கொண்டுவந்து பொதுவெளிகளில் மக்கள் நடமாட்டத்தை முடக்கிவருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் முழு ஊரடங்கை கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள இடங்களில் இன்னும் கூடுதலாக 6 முதல் 8 வாரங்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஐ.சி.எ.ம்ஆர் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா இரண்டாம் அலை

ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பார்கவா கூறுகையில், "இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு மாநில அரசுகள் கொரோனா லாக்டௌன்களை அறிவித்திருக்கின்றன.

கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் 10 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில் அந்தந்தப் பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும். இந்தியாவில் தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 4-ல் 3 பங்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. மும்பை, பெங்களூரு, டெல்லி எனப் பெருநகரங்களிலும் இதே சூழல்தான் நிலவிவருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை 6-லிருந்து 8 வாரங்கள் வரை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை அரசுகள் தவிர்த்தல் நல்லது. லாக்டௌன் தொடர்ந்தால் மட்டுமே நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும்.

கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள இடங்களில் கொரோனா பாசிட்டிவ் 5 சதவிகிதமாகக் குறையும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம். ஆனால், அதற்குக் குறைந்தது 6-8 வாரங்கள் நமக்குத் தேவைப்படும். ஆரம்பத்தில் டெல்லியில் 35 சதவிகிதமாக இருந்த கோவிட் பாசிட்டிவ் ரேட் தற்போதுதான் 17 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை டெல்லி போன்ற இடங்களில் தளர்த்துவது ஆபத்தானது.

லாக்டௌன்

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பதில் சற்றே தாமதமாகச் செயல்பட்டது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசுகள் காலம் தாழ்த்திவிட்டன. மத்திய அரசு ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சரிவுகளைக் கருத்தில்கொண்டு கொரோனா பாதிப்புகளை மாநில அரசுகள்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது" என்றார்.

ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவாவின் கருத்தை வரவேற்றுள்ள மருத்துவ நிபுணர்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/india/icmr-chief-balram-bhargava-says-most-of-country-should-remain-in-lockdown-for-6-8-weeks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக