Ad

வியாழன், 13 மே, 2021

`8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் வராது!' - உறுதியளித்த வேளாண் அமைச்சர்; ஆர்வலர்கள் சொல்வது என்ன?

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை மற்றும் ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தலின்போது தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது, புதிய ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராகியிருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை டு சேலம் 8 வழிச்சாலை திட்டம்

சென்னையிலுள்ள செம்மொழிப் பூங்காவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பூங்கா வளாகத்தில் மரக்கன்று நடவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``2010-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் நினைவாக, சென்னையில் 8 கோடி ரூபாய் செலவில் 7.92 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார். சென்னை போன்ற மக்கள் தொகை நெருக்கடி அதிகமுள்ள பகுதியில் இத்தகைய பூங்காக்கள் தேவை.

தோட்டக்கலைத் துறை மூலம் 24 பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் பராமரிக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில், அவற்றைச் சரியாகப் பராமரிப்பதுடன், தமிழகத்தில் மேலும் 120-க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகள் திறக்கப்படும். புதிய வேளாண் சட்டங்களைத் தடை செய்வது தொடர்பாக, ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும்.

ஹைட்ரோகார்பன்

பலாப் பழங்களை சந்தைப்படுத்துவது, பண்ருட்டி பலா பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னைக்குக் கொண்டுவருவது ஆகியவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மும்முனை மின்சாரத்திற்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு, விரைவில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகிய விவகாரங்களைப் பொறுத்தவரை அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. அதைத் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்" என்று வேளாண்துறை அமைச்சர் கூறினார்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, தி.மு.க ஆட்சிக்கு வந்தால், எட்டுவழிச்சாலை திட்டத்தையோ டெல்டா மாவட்டத்தைச் சூரையாடக் கூடிய மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களையோ அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், தற்போது வேளாண்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அது நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன், ``தேர்தல் அறிக்கையில் தி.மு.க, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார்கள். அந்த முடிவில் அவர்கள் உறுதியாக இருப்பதை விவசாயத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்து வரவேற்கப்பட வேண்டியது" என்று கூறினார்.

வயல்

மேலும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வரும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேரா.ஜெயராமனிடம் இதுகுறித்துப் பேசினோம். அவர், ``இந்த அறிவிப்பை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்கிறது. இந்த முடிவில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்பதே எங்கள் வேண்டுகோள். கடந்த காலத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. இன்று புதிய அரசு, மக்களுடைய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் பல போராட்டங்களுக்குப் பின் சாத்தியமானது. அதற்காகவே, ஒரு கோடி கையெழுத்து இயக்கம் போன்ற வழிகளில் ஏழு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இருப்பினும், அந்தச் சட்டத்தில் சில போதாமைகள் இருக்கின்றன. அன்றைய முதல்வர், இப்போதைக்கு புதிய திட்டங்கள் வராமல் தவிர்ப்போம். நீங்கள் சொல்வதையெல்லாம் எதிர்காலத்தில் இந்தச் சட்டத்துக்குள் சேர்ப்போம் என்று கூறினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்

இந்நிலையில், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இந்தப் புதிய அரசு சரி செய்ய வேண்டும். குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவையே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அதில் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகை முழுமையாக, இந்த வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. ஆகவே, காவிரிப் படுகை முழுவதையும் வேளாண் மண்டலச் சட்டத்துக்குள் இணைக்க வேண்டும்

மேலும், இந்தச் சட்டத்தில் பழைய திட்டங்கள் தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட புதிய திட்டங்கள் தடை செய்யப்படுகிறது. ஆனால், பழைய திட்டங்கள் செயல்படுவதை இது தடுக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பெரியளவுக்குப் பாதிப்புகுள்ளாகி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததே செயல்பாட்டிலுள்ள பழைய திட்டங்களால்தான்.

ஓ.என்.ஜி.சி கிணறு

ஓ.என்.ஜி.சி பழைய வளாகங்களில் புதிய கிணறுகள் அமைப்பதைச் சத்தமின்றிச் செய்கின்றது. இங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பொதுமக்கள் அறிவதில்லை. ஏன், அரசியல் தலைவர்களே கூட அறிய மாட்டார்கள். இது, எதற்காகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டு வரப்பட்டதோ அந்த அடிப்படைக்கே விரோதமானது. ஆகவே, பழைய திட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற பொருளுக்கு உரியதாக இந்தப் பகுதி இருக்கும்.

மூன்றாவதாக, இதற்கென ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் போதாமை நிறைய உள்ளது. சுற்றுச்சூழல் துறையினர் அதில் இடம் பெறவில்லை. அதோடு, போராட்டக்காரர்கள் இந்தப் பகுதிகள் மற்றும் பிரச்னைகள் குறித்து விரிவாகத் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், எங்கள் தரப்பு தகவல்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பே அந்த ஆணையத்தில் இல்லை. இப்படியின்றி, இந்த ஆணையத்தில் விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோர் ஆணையத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது அதன் உண்மையான பொருளுக்கு ஏற்ப நடைமுறையிலும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே காவிரிப் படுகை விவசாயிகளின் கோரிக்கை. இவற்றையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களில் மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட்டதைப் போலவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலும் மக்களின் கோரிக்கைகளை அரசு செயல்படுத்த வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/chennai-salem-expressway-hydrocarbon-project-will-not-be-allowed-says-tn-agri-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக