தஞ்சாவூர் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைப் பயிர்கள் அடியோடு சாய்ந்தன. ஒருவருக்கு மட்டும் சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த வாழைகள் சாய்ந்து கிடப்பதைப் பார்க்க முடியாமல் அந்த விவசாயி கண்ணீர் வடித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் பிரபு. இளைஞரான இவர் விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். இன்னும் 20 தினங்களில் அறுவடை செய்யும் அளவில் வாழை தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் அனைத்து வாழைகளும் சாய்ந்துவிட்டன. 5,000 கட்டைப் பதித்து பிள்ளைபோல பார்த்து ஆளாக்கி பலன் கொடுக்குற நேரத்துல இயற்கை இரக்கம் சிறிதுமின்றி வாழைகளைச் சாய்த்துவிட்டதாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபுவிடம் பேசினோம், ``ஒவ்வொரு விவசாயியும் விவசாயத்தை உயிராக நினைப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதை கைவிடுவதே இல்லை. ஆனால், கடந்த சில வருடங்களாக விவசாயிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஜா புயல், கடந்த வருடம் கொரோனா பாதிப்பு, இப்போது இரண்டாவது அலையிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.
கடந்த வருடத்தின்போது வாழை விளைச்சல் அமோகமாக இருந்தது அந்த மகிழ்ச்சி கொஞ்ச நாள்கூட நீடிக்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விளைந்த வாழைத்தார்களைக்கூட விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கண்முன்னே வாழைத்தார்கள் அழுகியது, வாழையிலே இருந்த தார்களை பறவைகள் சாப்பிட்டது. வேறு வழியில்லாமல் விவசாயிகள் பலரும் கண்ணீர் வடித்த நிலையில் வாழைத்தார்களைக் கால்நடைகள் சாப்பிட போட்டனர்.
அப்போது பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது மனம் வெதும்பிய நிலையிலும் முடங்கிவிடாமல் விவசாயிகள் அடுத்த சாகுபடியைச் செய்து வந்தனர். நான் என்னுடைய 5 ஏக்கரில் 5,000 கட்டைகளைப் பதித்தேன். ஒவ்வொன்றும் 10 அடி வரை வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன, போன வருஷம் பாதிக்கப்பட்டுட்டோம் இந்த முறை கரையேரலாம் என நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் கொரோனா பரவி லாக்டெளன் அமலுக்கு வந்தது.
அந்தத் துயரம் தீர்வதற்குள் இயற்கையும் சேர்ந்து என் போன்ற விவசாயிகளை வஞ்சித்துவிட்டது. நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை வாழைக் கட்டைகளை அடியோடு சாய்த்துவிட்டன. காலையில தோப்புக்குச் சென்று பார்த்ததுமே தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. வாழை சாய்ந்து கிடப்பதை பார்க்கவே முடியவில்லை. வாழைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் போல் வாழை பயிரிட்டிருந்த சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி மீளப் போறோம் எனத் தெரியவில்லை" எனக் கண் கலங்கினார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் கூறுகையில், ``அரசு வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 தருகிறது. தோராயமாக ஒரு ஏக்கருக்கு ரூ.8,000 கிடைக்கிறது. வாழை விவசாயத்துக்கு ஒரு ஏக்கருக்கு வாழைக் கன்னு வாங்கவே ரூ.12,000 செலவாகும். அது போக புதைக்கிற செலவு, வளர்த்து ஆளாக்குவதற்கான செலவு என அறுவடை வரை நீடித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் வாழை விவசாயிகள் தொடர் இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.
எனவே, அரசு இதைப் பரிசிலீத்து ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.50,000 நிவாரணம் தர வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே விவசாயி மறு சாகுபடி செய்வதற்கான சூழல் ஏற்படும். தற்போது பெய்த மழையில் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை ஆய்வு செய்து பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தார்.
source https://www.vikatan.com/news/agriculture/thanjavur-farmer-lost-5-acres-of-banana-trees-due-to-sudden-rain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக