கேரள மாநிலத்தில் தொடர்ந்து இராண்டாவது முறையாக ஆட்சியைப்பிடித்தது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. இதையடுத்து திருவனந்தபுரத்தில் நேற்று மாலை எளிமையாக நடந்த விழாவில் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அனைத்து அமைச்சர்களின் துறைகளையும் முதல்வர் பினராயி விஜயன்தான் முடிவு செய்தார். அதன் அடிப்படையில் கேரள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை உள்ளிட்ட கேரளத்தின் கோயில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருப்பது கேரளத்தையும் தாண்டி பிற மாநில மக்களிடையேயும் பாராட்டைப் பெற்றுள்ளது. கேரளத்தில் ஏற்கனவே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தேவசம்போர்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரள தேவசம் போர்டு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு அமைச்சராகி இருக்கும் ராதாகிருஷ்ணன், திருச்சூர் மாவட்டம் சேலக்கரை தொகுதி மக்களால் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இப்போது சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார். கேரளா வர்மா காலேஜில் படிக்கும்போதே எஸ்.எஃப்.ஐ யூனிட் செயலாளாராக இருந்தார். சேலக்கரை ஏரியா செயலாளர், திருச்சூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்து வந்துள்ளார்.
1991-ல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ல் சேலக்கரை சட்டசபை தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அன்றைய முதல்வர் இ.கே.நாயனாரின் அமைச்சரவையில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின நலம் மற்றும் இளைஞர் நல அமைச்சராக இருந்தார். 2001-ல் மீண்டும் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றவர், சட்டசபை ஸ்பீக்கராக நியமிக்கப்பட்டார். 2011-ல் மீண்டும் சேலக்கரையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016-ல் போட்டியிடாமல் கட்சிப்பணிக்காக சென்றார்.
2021 தேர்தலில் சீட் வழங்கப்பட்டு 39,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் இப்போது தேவசம்போர்டு அமைச்சர் ஆகியுள்ளார். இவர் அடிப்படையில் விவசாயியாக உள்ளார். குத்தகைக்கு எடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களை விவசாயம் செய்து வருகிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். கடந்த முறை கடகம்பள்ளி சுரேந்திரன் தேவசம்போர்டு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள முதல்வரின் இந்த முடிவினை தமிழக அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தனது புதிய அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.இராதாகிருஷ்ணன் அவர்களை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொல் திருமாவளவன், ``இராதாகிருஷ்ணன் கேரளா தேவசம் போர்டு (இந்து அறநிலையத்துறை) அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் துணிச்சலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நெஞ்சார பாராட்டுகிறது. 50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பி.ஆர்.பரமேஸ்வரன். இன்று கேரளாவில் இராதாகிருஷ்ணன். வெல்லும் சமூக நீதி” என குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-devasom-board-minister-appointment-tn-political-leaders-praises-kerala-cm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக