Ad

ஞாயிறு, 16 மே, 2021

குஜராத்:`அரசு கணக்கு 4,128; இறப்பு சான்றிதழ் 1,23,873; மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்' - ப.சிதம்பரம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மறுபுறம், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பெருமளவில் இருந்து வருகிறது. சமீப நாட்காளாக, கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை முறையாக தகனம் செய்ய இடமில்லாமல் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை நதியின் கரைகளில் புதைக்கப்படும், எரிக்கப்படும், நதிகளில் வீசப்படும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. இதில் அடையாளம் தெரியாமல் கரையொதுங்கும், அடித்துச் செல்லப்படும் சடலங்கள் துயரத்தின் உச்சம். இந்நிலையில், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்போரின் உண்மையான எண்ணிக்கைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

கொரோனா

இது தொடர்பாக ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான சக்திசிங் கோகில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது,``குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மட்டும் சுமார் 1,23,873 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால், இந்த தேதிக்குள் வெறும் 4,128 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இச்சமயம் வெறும் 58,023 இறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ``இந்த எளிய கணக்குகூட மத்திய அரசுக்கு தெரியவில்லை"- தடுப்பூசி விவகாரத்தில் ப.சிதம்பரம் கடும் தாக்கு

அப்படியிருக்கையில், இந்தாண்டு கொரோனாவால் உயிரிழந்த நான்காயிரம் பேரைத் தவிர்த்து மீதம் உள்ளவர்கள் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அரசால் சமாளிக்க முடியாது. இந்த இறப்பு விகிதமானது கொரோனா தொற்றால் மட்டுமே அதிகரித்துள்ளது. ஏனெனில், இந்தப் புள்ளிவிவரங்களை குஜராத்தின் 33 மாவட்டங்களிலிருருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.

அதுமட்டுமல்லாது சமீபத்தில், கங்கையின் நதிக்கரைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெக்கப்பட்டதே இதற்கு சான்று. மத்திய அரசும் மாநில அரசும் இந்த உண்மையை மறைக்கப் பார்க்கின்றன, என்பதில் எங்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது. உண்மையை வெகுகாலம் மறைக்க இயலாது. விரைவில் அது வெளிப்பட்டுவிடும்.

சிதம்பரம்

குஜராத்தைப் போலவே மற்ற சில மாநிலங்களும் இதுபோன்ற செயல்களை செய்துவருவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநில அரசும் வழங்கிய இறப்புச் சான்றிதழ்களின் எண்ணிக்கைகள் குறித்த அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், இந்த அறிக்கையை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம். `உண்மை என்ன ?!’ என்பது குறித்து அப்போது அனைவருக்கும் தெரிய வரும். ஒருவேளை இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அது நமது நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம்” என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/general-news/gujarat-covid-19-deaths-underreported-says-chidambaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக