Ad

சனி, 8 மே, 2021

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு... மாணவர்கள் விரக்தி!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மே 7 அன்று தி.மு.க அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திலும் முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். மே 10 தொடங்கி மே 24 வரை அமலில் இருக்கும் இந்த முழு ஊரடங்கினால், மாநிலத்தில் அத்தியாவசியச் செயல்பாடுகள் தவிர அனைத்தும் ரத்தாகின்றன.

இந்தப் பின்னணியில்தான், மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை தேர்வு, ஜூன் 6-ல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஆகியவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
டி.என்.பி.எஸ்.சி.

ஜூன் 5 அன்று நடைபெறவிருந்த இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் (டேராடூன்) ஜனவரி 2022-ம் பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வின் விண்ணப்பிக்கும் தேதி மட்டும் மே 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து கொண்டிருப்பதால், மே மாதம் நடக்கவிருந்த அனைத்து எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில்தான் தமிழகத்திலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

Also Read: 21 வயதே நிரம்பாத 13,127 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வெழுதிய ஆச்சர்யம்!

மாணவர்களின் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிப் போவது குறித்து குரூப் 2 தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் பேசும்போது, “டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணையின்படி இந்த மே மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு (notification) வந்திருக்க வேண்டும்; குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தோராயமாக செப்டம்பர் மாதம் எதிர்பார்க்கப்படும். ஆனால், இப்போது கொரோனா தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இன்னும் தேர்வு குறித்த அறிவிப்பே வராத நிலையில் எங்களைப் போன்றோர் மிகுந்த விரக்திக்கு ஆளாகியிருக்கிறோம். முழு நேரம் உட்கார்ந்து படித்தால்தான் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்பதால், வேறு வேலைக்குச் செல்வதும் சாத்தியமில்லாதது... அதுவும் இந்தச் சூழலில் வேலைக்குச் செல்வது பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இது பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் மிகுந்த பின்னடைவைத் தருகிறது. விரைவில் கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்பதே இந்த நிலையில் எங்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது!” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/tnpsc-exam-postponed-amid-rise-in-covid-19-cases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக