Ad

செவ்வாய், 25 மே, 2021

ஏன் தங்க ETF முதலீடு அதிகரிக்கிறது?

தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 2021 ஏப்ரல் மாதத்தில் ரூ.184 கோடி அளவிற்கும், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தின் மூலம் ரூ.680 கோடி அளவிற்கும் இந்திய மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

நமது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் பொழுது இந்திய மக்கள் தங்கம் சார்ந்த திட்டத்தில் அதிகமாக முதலீடு செய்திருப்பது இந்திய மக்களிடம் எப்போதும் தங்கம் ஒரு சிறந்த முதலீடு ஆக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. 2020-21 நிதியாண்டில் மொத்தமாக தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் ரூ.3,200 கோடியும் கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1,900 கோடியும் இந்திய மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்று மார்னிங் ஸ்டார் இந்தியா கொடுத்துள்ள தரவுகளின் மூலம் அறிய முடிகிறது.

GOLD

தங்கத்தில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யப்படும் இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு சராசரியாக கடந்த மூன்று ஆண்டுகளில் 13 முதல் 14% வரை வருமானம் அளித்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 8% வருமானத்தை இந்தத் திட்டங்கள் வழங்கியிருக்கின்றன. இதன் மூலம் பெரும்பாலான வங்கி டெபாசிட் திட்டங்களை விட அதிக வருமானத்தை தங்கம் அளித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் தவறான முதலீட்டு முடிவுகள் காரணமாக மூலதனத்தை இழக்கும் அபாயம் உள்ளது. ஆனால், தங்கம் சார்ந்த திட்டங்களில் இது போன்ற அபாயங்கள் கிடையாது. அதனால் தான் தங்கம் சார்ந்த முதலீடு இந்திய மக்களிடம் எப்போதும் முக்கிய முதலீட்டுத் திட்டமாக உள்ளது.

ஆபரணமாக வாங்கி சேர்ப்பதை விட இது போன்ற டிஜிட்டல் திட்டங்களில் முதலீடு செய்வது செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற செலவினங்களை குறைத்துவிடுகிறது. கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு தேவைப்படும். பான் கார்டு மற்றும் விலாச சான்று போன்ற அடிப்படை தகவல்களை கொடுத்து டிமேட் கணக்கை தொடங்க முடியும்.

தங்கம்

தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தத் திட்டத்தை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடிப்படைத் தகவல்களை கொடுத்து தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும், எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்வதற்கு வழி உள்ளது. இதன் மூலம் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தங்கத்தை வாங்க முடியும்.

அதனால், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி தமது முதலீட்டை மேற்கொள்ளலாம்.



source https://www.vikatan.com/business/finance/why-investment-in-gold-etf-is-in-upward-trend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக