Ad

சனி, 15 மே, 2021

புதிய கல்விக்கொள்கை: `மே 17-ல் ஆலோசனைக் கூட்டம்’ - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக வருகின்ற மே 17-ம் தேதி, அனைத்து மாநில கல்வித்துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் கல்வித்துறையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் கருத்துகேட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ANI செய்தி ஊடகத்திற்கு மத்திய அரசு அளித்த தகவலில், வருகின்ற மே 17-ம் தேதி நடைபெறும் இணையவழி கூட்டத்தில் (Virtual Meeting), புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது மற்றும் இணைய வழி கல்விக் கற்றலை (Online Education) மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து திறனாய்வு செய்யும் விதமாக கலந்தாலோசனைக் கூட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் பொக்ரியால் நிஷங்க்

"மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கிட்டத்தட்ட அனைத்து மாநில கல்வி செயலர்களையும் வருகின்ற திங்கள்கிழமை ஆன்லைன் வழியாக சந்திப்பார். அந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக கொரோனா நோய்த்தொற்று மற்றும் கல்வித்துறையில் அதன் தாக்கம், ஆன்லைன் கல்வியை மேம்படுத்துதல், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் அதுகுறித்து மாநில அரசுகளின் உருவாக்கம்" போன்றவை இடம்பெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் ANI ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை சமாளிக்க, மாநில கல்வித் துறைகள் ஏற்படுத்திய முன்னெச்சரிக்கை தயாரிப்புகள், நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பரவலையும் மீறி மாணவர்கள் தங்களின் ஆன்லைன் கல்வியை எவ்வாறு தொடரலாம் என்பது பற்றியும் மத்திய அமைச்சர் மதிப்பாய்வு செய்யவுள்ளார் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்குப் பின், மாநில கல்விச் செயலர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் மேற்கொள்ளும் முதல் ஆன்லைன் சந்திப்பு இதுவாகும்.

Also Read: புதிய கல்வி கொள்கை: `தனியார்மயமாக்கலுக்குதான் உதவும்!’ - சமூக ஆர்வலர்கள் கவலை

முன்னதாக, மாணவர்களுக்கான உயர்கல்வித் தேர்வுகள் அனைத்தும் மே மாதம் நடத்தப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா தீவிரம் காரணமாக அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் "தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை அமல்படுத்துவோம்” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஒருசேர தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில், மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தது. பின்னர் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது. ஆனால், “தமிழ்” மொழியில் மட்டும் இடம்பெறவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து தமிழில் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/news/meeting-announced-for-new-education-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக