Ad

திங்கள், 17 மே, 2021

மும்பை: சூறாவளியால் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 146 பேர் மீட்பு! - 127 ஒ.என்.ஜி.சி. ஊழியர்கள் நிலை?

மும்பையில் நேற்று டவ்தே புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. நகரில் புயலால் பலத்த காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது. இம்மழையால் நகரின் பல இடங்களில் மின் கசிவு ஏற்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பல மணி நேரம் இருளில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இரவு வரை மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் பஸ் மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

26 இடங்களில் சுவர் இடிந்து 8 பேர் காயம் அடைந்தனர். பலத்த காற்று காரணமாக மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் 600 மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஓவல் மைதான், கொலாபா, ஹிந்த்மாதா, கிங் சர்க்கிள், தாதர் டிடி போன்ற இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் டவ்தே புயல் மும்பையை கடந்து குஜராத் நோக்கி சென்றது. புயலால் மும்பையில் 214 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே மாதம் 190 மிமீ அளவுக்கு மழை பெய்திருந்தது. அதே போல் இந்த அளவுக்கு பலத்த புயல் மும்பை அருகில் கடந்திருப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

மழைநீரில் சிக்கிய பஸ்

இப்புயலின் தாக்கம் காரணமாக கடலில் தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. இதனால் மும்பை அருகில் நடுக்கடலில் இருக்கும் ஹீரா எண்ணெய் கிணற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மிகப்பெரிய படகில் ஒ.என்.ஜி.சி. ஊழியர்கள் 273 பேர் தங்கி இருந்தனர். அந்த படகு ஊழியர்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பகலில் ஒரு முறை இப்படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு சென்றது. போராடி அதனை மீண்டும் நங்கூரமிட்டு நிலை நிறுத்தினர். ஆனால் இரவில் சூறாவளி காற்று காரணமாக மீண்டும் படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த எண்ணெய் கிணற்றின் மீது மோதிக்கொண்டது.

இதில் படகு சேதமடைந்து அதற்குள் தண்ணீர் சென்றது. இதனால் படகு கவிழ ஆரம்பித்தது. ஏற்கனவே அப்படகு விபத்தில் சிக்கி இருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து கடற்படை கப்பல்கள் ஹீரா எண்ணெய் கிணறு நோக்கி சென்றது. 3 கப்பல்கள் சம்பவ இடத்தை அடைந்து படகில் இருந்தவர்களை மீட்க ஆரம்பித்தது.

காலை வரை 146 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. எஞ்சிய 127 பேரை கடற்படை கப்பல்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்ததால் கடற்படையினரால் மீட்புப்பணியை தொடர்ந்து இரவில் முழு அளவில் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இரவு முழுவதும் கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் பலத்த காற்று மற்றும் கன மழையால் 2500 வீடுகள் சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்தனர். அதிகமான உயிரிழப்புக்கள் கொங்கன் பகுதியில்தான் நடந்துள்ளன. மகாராஷ்டிரா மட்டுமல்லாது அருகில் உள்ள கோவாவிலும் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. கோவா முழுக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மின்சாரம் இல்லாமல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பை சரி செய்ய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/india/hurricane-near-mumbai-boat-collapsed-with-273-in-sea-search-operation-continues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக