‘’கொரோனா தாக்குதலுக்கு ஆளான எனது இரண்டு உறவினர்கள் மூலமாக தமிழகத்தின் தற்போதைய கொடூரமான சூழ்நிலையை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஊரில் என்னுடைய இன்னொரு உறவினர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இறந்தே விட்டார். தொடர்ச்சியாக அங்கிருந்து இதே போன்ற செய்திகளே வந்தவண்ணம் உள்ளன. பத்திரக்கோட்டை என்கிற என்னுடைய கிராமத்துக்காக மட்டும் நான் பேசவில்லை. தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் சேர்த்துதான் பேசுகிறேன்.
நோயை உடனடியாகக் கண்டறியும் வசதி கொண்ட மருத்துவமனைகள் இன்றைக்கு எந்தக் கிராமத்திலும் இல்லை. சுமார் 20 கி.மீ பயணம் செய்து பரிசோதனை முடித்தால் முடிவு தெரிய மூன்று நாட்கள் ஆகிறது. ஒருவேளை தொற்று உறுதியானால், இந்த மூன்று நாட்களுக்குள் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது.
ஒரு உறவுக்காரர் இறந்து விட்ட நிலையில், இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவசர ஊர்தி கிடைத்து விடுகிறது. ஆனால் ஆக்ஸிஜன் படுக்கை கொண்ட மருத்துவமனை? சிதம்பரம் முதல் சென்னை வரை எங்குமே கிடையாது. எப்படியாவது சென்னைக்கு வந்து விடலாமென்றால், அவசர ஊர்தியில் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருக்கிறதென்கிறார்கள். இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
மருத்துவமனையைக் கண்டுபிடிக்கும் முன்னரே போராடிக் கொண்டிருக்கும் உயிர் போய் விடுகிறது. இதற்காகத்தான் தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே உள்ள அரசுக் கட்டடங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றும்படி தமிழக அரசுக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். இப்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருப்பது கொஞ்சம் ஆறுதல் தருகிறது.
இதனால் நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் செயல்பாடுகள் தெம்பை அளித்திருக்கின்றன. தடுப்பூசி கொள்முதல் விஷயத்தில் ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்க எடுத்த நடவடிக்கை ஒன்றே அதற்குச் சாட்சி. எனவே விரைவில் நல்லது நடக்குமென நம்புவோம்.'' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/director-thangar-bachans-plea-to-tamilnadu-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக