Ad

வெள்ளி, 14 மே, 2021

கோவா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! - 4 நாளில் 75 பேர் மரணம்?!

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் முக்கிய தேவையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்ததால் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் ஆக்ஸிஜன் கசிவால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. நாசிக் அரசு மருத்துவமனையில் இது போன்று ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அது போன்ற ஒரு சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளது.

தெற்கு கோவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே இம்மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் டேங்கில் இருந்து ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டது.

pramod sawant

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் ஆக்ஸிஜன் கசிவை சரி செய்வதற்கு முன்பாக 26 கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த மருத்துவமனையை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அளித்த பேட்டியில், ``ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவையில் இடைவெளி இருக்கிறது. இந்தப் பிரச்னை சரி செய்யப்படவேண்டும் . ஆனால், தற்போது கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை" என்றார்.

ஆனால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜீத் ரானே அளித்த பேட்டியில், ``காலை 2 மணியில் இருந்து 6 மணி வரை ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். கொரோனா நோயாளிகள் இறந்ததற்கான காரணம் குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்கவேண்டும். உயர் நீதிமன்றம் தலையிட்டு தெற்கு கோவா அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சப்ளை செய்யப்படும் ஆக்ஸிஜன் அளவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆக்ஸிஜன் உருளை

ஆனால் இந்த பிரச்னை அத்தோடு முடிந்துவிட விட வில்லை. வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையை முன்னாள் முதல்வர் விஜய் சர்தேசாய் பார்வையிட்ட பிறகு அளித்த பேட்டியில், ``அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணிக்குள்தான் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். மே 10-ம் தேதி 26 பேரும், 11-ம் தேதி 21 பேரும், 12ம் தேதி 15 பேரும், 13ம் தேதி 13 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் சாவு எண்ணிக்கை குறையவில்லை. நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. அரசு எதையும் செய்யவில்லை” என்றார்.



source https://www.vikatan.com/news/india/oxygen-leak-in-goa-75-corona-patients-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக