அவளின் குரலை ஆடியோவாக கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்
இயக்குநர் பாலாவிடம், இயக்குநர் சுதா கொங்கரா பற்றி கேட்கப்பட்ட ஒரு பேட்டியில், `ஒரு பெண் இயக்குநரா அவர்...' என்று நெறியாளர் கேள்வியை முடிக்கும் முன்னரே குறுக்கிட்டார் பாலா. `இயக்குநர்னு சொல்லுங்க, பெண் இயக்குநர்னு ஏன் சொல்றீங்க' என்று திருத்தி, திறமைக்கு பாலினம் இல்லை என்று அழுத்தமாகப் பதிவு செய்தார். சினிமா போன்ற ஒரு பொழுதுபோக்குத் துறையில், பெண்களை பாலினம் கடந்து அவர்களின் திறமையைக் கொண்டாடும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், கொள்கை முழக்கங்களும் முற்போக்கு கருத்துகளும் தெறிக்கவிடப்படும் அரசியலில், பெண் அரசியல்வாதிகளை இன்னும் இரண்டாம் தரமாகவே நடத்தும்போக்கு நீடிப்பது, கண்டனத்துக்குரியது. சமீபத்திய உதாரணம், கே.எஸ்.அழகிரியின் பேச்சு.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண் பேடி, சில நாள்களுக்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூடுதலாக அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவிக்க, தமிழிசை அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை விமான நிலையத்தில், இது குறித்து பேட்டியளித்தார். அப்போது, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க பிரதமர் மோடி, கிரண்பேடியை அனுப்பியிருந்தார். இப்போது அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தமிழிசையை அனுப்பியுள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர். ஆனால், எல்லா முறையும் கிருஷ்ணர் தப்பித்தார். பெண்கள்தான் தப்பிக்கவில்லை. அதுதான் தற்போது கிரண்பேடிக்கு நடந்துள்ளது. அடுத்து தமிழிசைக்கு என்ன நேரப்போகிறது என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
Also Read: நாங்கள் நீதி கேட்டால் மட்டும் எங்கள் நடத்தையும் கேள்விக்குள்ளாவது ஏன் ராமச்சந்திரன்? #VoiceOfAval
அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டேதான் இருக்கும். புதுச்சேரியிலும் அப்படி ஓர் அரசியல் மாற்றம் நடந்திருக்கிறது. ஆனால், துணைநிலை ஆளுநர், ஆளுநர் என்ற பொறுப்புகளில் இருப்பவர்களையும், `பெண்கள்' என்றே சுருக்கிப் பார்க்கிறார் கே.எஸ்.அழகிரி. அந்த ஆணாதிக்க வழக்கத்தில் இருந்து விடுபட, இத்தனை ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கூட அவரை நெறிப்படுத்தவில்லை என்பது துயரம்.
அதிலும், கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கும் இதிகாச உதாரணம், இன்னும் கொடூரம். கிருஷ்ணரை கொல்ல அனுப்பப்பட்ட பெண்களை, கிரண் பேடி, தமிழிசை சௌந்தரராஜனோடு ஒப்பீடு செய்திருக்கிறார். கண்டனங்கள். மேலும், சதி வேலைகளுக்காக அனுப்பப்படும் மாயவேலைக்காரர்கள் பெண்கள் என்ற தன் ஆழ்ந்த நம்பிக்கையை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக, `கிருஷ்ணரைக் கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர்' என்றிருக்கிறார்.
சாலைகளில் ஆண்களின் வாகனங்களை பெண்களின் வாகனங்கள் ஓவர்டேக் செய்தாலே, `ஒரு பொம்பள நம்மள முந்துறதா' என்று வெறிகொண்டு ஆக்ஸிலேட்டரை அலறவிடும் ஆண்கள் மனதின் பிரதியாக, இன்னொரு முத்தான கருத்தையும் சொல்லியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர்தான் ஜெயித்தாராம், பெண்கள் தப்பிக்கவில்லையாம். ஆணை ஒருபோதும் பெண்ணால் வெல்ல முடியாது, வெல்லக் கூடாது என்று நூற்றாண்டுகளாக இங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஆணாதிக்கத்தின் சுவருக்கு, தன் பங்குக்கு ஒரு கோட் பெயின்ட் அடித்துவிட்டிருக்கிறார் கே.எஸ். அழகிரி.
மேலும், கிருஷ்ணரை அழிக்க வந்த பெண்களுக்கு நேர்ந்ததுதான் கிரண் பேடி, தமிழிசைக்கும் நடக்கும் என்றும் எச்சரிக்கை விட்டிருக்கிறார். இங்கு ஜெகம் காக்க வந்த கிருஷ்ணர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அழிக்க புதுச்சேரிக்கு வந்தவர்கள், பெண்கள். கே.எஸ்.அழகிரிகளே... பெண்களை கீழ்மையானவர்களாகச் சித்திரிக்கும் இதுபோன்ற வார்த்தைகளை, உதாரணங்களை, கருத்துகளை எல்லாம் அரசியல் அரங்குகளில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
கிரண் பேடியோ, தமிழிசை சௌந்தரராஜனோ பெண்கள் என்பதாலேயே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. வகித்த பொறுப்புகள், அரசியல் செயல்பாடுகள், கொள்கைகள், செயல்பாடுகள் என அவர்களை அவர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் விமர்சியுங்கள். ஆனால், `பெண்களா இருந்துக்கிட்டு...' என பாலினம் ரீதியாக அவர்களை விமர்சிக்கும் வார்த்தைகள், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகா? நீங்கள் சார்ந்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஒரு பெண்தானே?
Also Read: இன்னும் எத்தனை `புஷ்பா'க்களின் தீர்ப்புகள் நம் கவனத்திற்கு வராமல் போயிருக்குமோ?! #VoiceOfAval
`அவர் ஏதோ `யதார்த்தமா' பேசினார்... இதெல்லாம் ஒரு விஷயம்னு உடனே கண்டிக்க வந்துட்டீங்க' என்று சொல்பவர்கள், உங்கள் மரபணுவிலேயே அந்த ஆதிக்கம் ஆழப் பதிந்திருக்கிறது என்பதை உணருங்கள். பெண்களை இரண்டாம் பாலினமாக ஒடுக்கி வைத்து, `இவளை என்ன வேணும்னாலும் பேசலாம்' என கீழ்மைப்படுத்தி ஆண்டாண்டுகளாகப் பேசிவந்தீர்கள். அதை எதிர்த்து ஒலிக்க ஆரம்பித்த பெண்களின் குரல்களுக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வெற்றிதான், மேடைகளில், சினிமாக்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி கட்டுரைகளில் பெண்களை கீழ்மைப்படுத்தும் சொற்கள் குறைந்துவருவது. எனவே, கண்டனங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது என்பது குற்றங்களைக் குறைக்கும் கருவிகளில் ஒன்று. அந்த வகையில், கே.எஸ்.அழகிரியின் வார்த்தைகளுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது, கடமையாகிறது.
கே.எஸ்.அழகிரி, அரசியலில் தன்னுடன் பயணிக்கும் பெண்களை `பெண்களாக' அல்லாமல், அரசியல்வாதிகளாகப் பார்க்கும் பக்குவத்தை இனியாவது பெறுவார் என்று நம்புவோம். மேலும், பெண்கள் சதிவேலைகளுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுபவர்கள், பெண்களால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது என்ற அவரின் நம்பிக்கைகளில் இருந்தெல்லாம் அவர் குணம் பெறுவார் என்றும் நம்புவோம்.
- அவள்
#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!
source https://www.vikatan.com/social-affairs/women/why-women-politicians-still-facing-sexist-remarks-a-question-to-ks-alagiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக