தி.மு.க இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளை முடிவு செய்யவில்லை. வேட்பாளர்களை அந்தக் கட்சி தலைமை அறிவிக்கவில்லை. ஆனால், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில் பாலாஜி, பிரசாரத்தை தொடங்கி, அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக மட்டுமின்றி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜி இருக்கிறார். தற்போது, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தாலும், வரும் தேர்தலில் தனது ராசி தொகுதியான கரூர் தொகுதியில் நிற்க முயற்சித்து வந்தார்.
அதற்கான, பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருந்த செந்தில் பாலாஜிதான், இப்போது பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறார். கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தை கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டி முத்தாலம்மன் கோயிலில் வணங்கிவிட்டு, தொடங்குவதுதான் வழக்கமாக இருக்கிறது.
இந்த ஆன்மிக சென்டிமென்டை தொடங்கி வைத்ததும், செந்தில் பாலாஜிதான். இதனால், கரூர் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரை என பலரும் இந்தக் கோயிலில் இருந்துதான் பிரசாரத்தை தொடங்கினார்கள். அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பிய தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, முத்தாலம்மன் கோயிலில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
Also Read: கரூர்: `அடுத்தவர் உழைப்பில் வளர்ந்த ஜெராக்ஸ் முதல்வர்!’ - செந்தில் பாலாஜி விமர்சனம்
கரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், கரூர் தொகுதியில் கடும்போட்டி ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அப்போது, தி.மு.க ஆட்சி அமைந்ததால் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக 5 ஆண்டுகள் முழுமையாகப் பதவி வகித்தார்.
பின்னர், நடைபெற்ற 2011 ஆம் வருட சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு, மன்னார்குடி லாபி மூலம் முதல்முறையாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனார். நான்கரை ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, கடந்த 2015 ஜூலை 7 - ஆம் தேதி, அப்போதைய அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால், பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி வகித்து வந்த கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு மற்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து கட்சி தலைமையால் நீக்கப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், பணபட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் களம் கண்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தபோது, அ.தி.மு.க இரண்டாக உடைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பிரிந்தது. அப்போது, டி.டி.வி அணியில் அ.ம.மு.கவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க தீர்ப்பைச் சந்தித்து, தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அதன்பிறகு, தி.மு.கவுக்கு சென்று, கடந்த 2019 இடைதேர்தலில் அரவக்குறிச்சியில் நின்று, மீண்டும் எம்.எல்.ஏவானார். அதேபோல், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கரூர் சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அதோடு, அ.தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.
இருவரும் கரூர் தொகுதியில் மோதுவதால், போட்டி பலமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். பணம் கடுமையாக விளையாடும், சொல்லப்போனால் பணப்பட்டுவாடா பிரச்னையில் சிக்கி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல் இந்த முறை கரூர் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படும் சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழக சட்டப்பேரவை உட்பட 5 மாநிலத் தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மட்டும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, பிரசாரம் செய்து வருகின்றனர்.
தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் இன்னும் கூட்டணிகளை முடிவுசெய்யவில்லை. அதோடு, அந்த கட்சிகள் சார்பில் தற்போது சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் மட்டும் பெறப்பட்டு வருகிறது. மறைமுகமாக அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு என ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் ஆலயத்தில் செந்தில் பாலாஜி வழிபாடு நடத்தி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து துண்டறிக்கைகளை வழங்கினார். பிரசாரத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி, பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி, 'கரூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக மீண்டும் வாய்ப்பு தாருங்கள்' என கேட்டுக்கொண்டார். ஆரத்தி எடுத்த பெண்களிடம், தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து, தி.மு.கவினரிடம் கேட்டால், ``தி.மு.க வில் செந்தில் பாலாஜி சேர்ந்தபோது, ஸ்டாலினிடம், `வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தி.மு.கவை ஜெயிக்க வைப்பேன்' என்று வாக்குறுதி கொடுத்தார். அதனால், அதற்காக கடுமையான வியூகங்களை வகுத்து வருகிறார். கரூரில் தன்னை எதிர்த்து போட்டியிடுவது எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பதால், முதலில் தனது வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக, ஊருக்கு முன்பாக முதல் ஆளாக பிரசாதத்தை தொடங்கிவிட்டார்' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/senthil-balaji-start-election-campaign-in-karur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக