உயிர் காலேஜும் செத்த காலேஜும்
எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் சென்னை சென்ட்ரலுக்குப் பின்னால் இருந்த மை லேடீஸ் பூங்காவின் அருகில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சிச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது வண்டலூரில் இருக்கும் மிருகக் காட்சிச்சாலையைவிட பன் மடங்கு சிறிய அழகான மிருகக் காட்சிச்சாலை அது. அதை சென்னை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. இந்த மிருகக் காட்சிச் சாலைக்கும் முன்னால் ஒரு மிருகக் காட்சிச் சாலை சென்னையில் இருந்தது.
அது எட்வர்டு கிரீன் பால்ஃபர் சென்னை மியூஸியத்தின் அதிகாரியாக இருந்தபோது, உயிரிழந்த விலங்குகளைப் பாடம் பண்ணி வைக்கப்பட்ட அருங்காட்சியத்தின் (படம்) அருகே உயிருள்ள விலங்குகளையும் கொண்டு வந்து வைத்தால், மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எண்ணினார். சுமார் 300 உயிரினங்கள் அங்கே கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. புலி, சிறுத்தை, பறவை இனங்கள் எல்லாம் அங்கு இருந்தன. ஒரே இடத்தில் உயிருள்ள ஜீவன்களும் பாடம் செய்துவைத்த விலங்குகளின் உடல்களும் அங்கே இருந்தன. இறந்த உயிரினங்களைப் பதப்படுத்தி வைத்திருப்பதால் இது செத்த காலேஜ். உயிரோடு விலங்குகள் இருந்த இடத்தை உயிர் காலேஜ் என்பர். செத்த உயிரினமோ, உயிரோடு இருப்பவையோ... ஒரு கைடு அவற்றைப் பற்றி மக்களுக்கு விளக்கிச் சொல்வதால் (பாடம் நடத்துவதால்) மக்கள் அவற்றை காலேஜ் என்று சொல்லப் பழகியிருக்கலாம் என நினைக்கிறேன்.
இப்போதும் சென்னை சேத்துப்பட்டில் பால்ஃபர் சாலை இருப்பதைப் பார்க்கலாம். அவர் அங்குதான் வசித்தார். 1854-ல் உருவாக்கப்பட்ட இந்த மிருகக் காட்சி சாலை அடுத்த பத்தாண்டுகளில் ரிப்பன் பில்டிங் பின்புறம் இருக்கும் பியூப்பில்ஸ் பார்க் அருகே மாற்றப்பட்டது. செத்த காலேஜ் வளாகத்தில் இருந்த அந்த உயிர் காலேஜ், இடப்பற்றாக்குறை காரணமாக இங்கே வந்தது. சுமார் 116 ஏக்கர் நிலப்பரப்பு மிருகக்காட்சி சாலைக்கு இருந்தது. அன்றைய தேதியில் தெரு நாய்களை விலங்குகளுக்கு கறியாகப் பயன்படுத்தப்படும் வழக்கம் இருந்தது. தெரு நாய்களைப் பிடிக்க வண்டிகள் வரும்போதெல்லாம் மக்கள் இந்த விஷயத்தைச் சொல்லுவார்கள். 1970 வரையே தெரு நாய்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டது. பிறகு விலங்குப் பிரியர்களின் போராட்டத்துக்குச் செவிசாய்த்து நாய்கள் தப்பித்தன.
1963 முதல் 1984 வரை இந்த இடத்தில்தான் உயிர் காலேஜ் இருந்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் அழைத்துச் செல்லப்பட்ட இன்பச் சுற்றுலாவின்போதுதான் முதன்முதலாக அந்த மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றேன். (படம்) அல்லது அதற்கு முன் சென்றது நினைவில்லை. அப்போது முதல் வீட்டுக்கு மிக அருகில் இருந்த அந்த மிருகக் காட்சிசாலை மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.
ஊரில் இருந்து யாராவது வந்தால், நண்பர்கள் கையில் ஒரு ரூபாய் முழுதாக இருந்தால் உடனே ஜூவுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. அங்குதான் எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கத்தைப் பார்ப்போம். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நன்கொடையாக வழங்கியது என்ற போர்டு ஒன்று இருக்கும். அதன் பெயர் ராஜா.
ராஜா என்றால் திரும்பிப் பார்க்கும். மக்கள் அடிக்கடி அந்தப் பெயரைச் சொல்லி அழைத்து அதற்கு மிகுந்த வெறுப்படைய செய்த காலகட்டத்தில் அது திரும்பிப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. சிலர் எம்.ஜி.ஆர் குரலில் அழைத்து கவர்வதற்கு முயற்சி செய்வார்கள். 'அடிமைப்பெண்' படத்தில் எம்.ஜி.ஆர். கட்டி உருளும் சிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சிங்கம்தான் அது. எம்.ஜி.ஆரின் வீட்டில் அவருடைய அரவணைப்பில் வளர்க்கப்பட்ட சிங்கம், தன் கடைசி காலத்தில் இப்படி நிராதரவாக விடப்பட்டது எனக்குள் மிக வேதனையான சித்திரமாகப் படிந்துவிட்டது. 80-களில் ஒருநாள் எம்.ஜி.ஆர் அதை ஜூவுக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் மறைந்தது என்று செய்தியாகப் பார்த்தேன். எம்.ஜி.ஆர் மீது இருந்த ஏக்கத்தினாலேயே அது இறந்துவிட்டதாக அப்போது பேசிக்கொண்டார்கள். அதன் பாடம் செய்யப்பட்ட உருவம் இப்போது எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ளது (படம்).
அந்த ஜூவை இப்போது பார்க்க வேண்டுமானால் ஒரே ஒரு வழி இருக்கிறது. எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி நடித்த 'காக்கும் கரங்கள்' படத்தைப் பாருங்கள். அதில் இடம்பெறும் `அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து' பாடல் முழுக்க முழுக்க அங்கு படமாக்கப்பட்டதுதான். சிறியவர்களுக்கு 15 காசு, பெரியவர்களு 25 காசு என்று போர்டு போட்டிருக்கும். பல ஜூக்களிலும் நுழைந்ததும் முதலில் மனிதக் குரங்கைத்தான் வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த பெங்களூர், திருவனந்தபுரம், மைசூர், சென்னையின் ஜூக்களில் இவைதான் முதன்மை வகிக்கின்றன.
ரயில்நிலையம் விஸ்தரிப்பு வேண்டி இந்த உயிர் காலேஜ் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டபோது இந்த மிருகக்காட்சி சாலையும் மூர் மார்க்கெட்டும் சென்னையின் அடையாளத்தில் இருந்து ஓய்வு பெற்றன. ராட்சஷ இரும்பு வாகனங்கள் இந்த இரண்டின் சமாதியின் மீதுதான் இப்போது தடதடக்கின்றன. ரயில் நிலையத்தின் தேவைக்காக இவை இரண்டும் இடிக்கப்பட்டன.
மூர்மார்க்கெட்... அங்கே விற்காத பொருள் இல்லை... அம்மா, அப்பாவைத் தவிர எல்லாவற்றையும் அங்கே வாங்கலாம் என்று சொல்வார்கள். குரங்கு, பச்சைக்கிளி, ஸ்கௌட் ட்ரஸ், வண்ண மீன்கள், அரிய பழைய புத்தகங்கள், நான்கு பேண்டு ரேடியோ, பூதக் கண்ணாடி, ரெக்கார்டு பிளேயர் எல்லாமே அங்கு விற்கும். மேலே சொன்னதில் குரங்கு, நான்கு பேண்டு ரேடியோ தவிர மற்றவை எல்லாவற்றையும் நான் வாங்கியிருக்கிறேன்.
சிலர் கூவி விற்பார்கள்...
வட இந்தியாவில் இருந்து வந்து கடைவிரிப்பார் இருந்தனர். அவர்களின் விற்பனை வினோதமானது. அது...
தொடரும்...
பகுதி 3-க்கு செல்ல...
Also Read: மெட்ராஸ் வரலாறு: தனி ரயில் வண்டி வைத்திருந்த இந்த தமிழரைத் தெரியுமா? - பகுதி 3
source https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-about-mgr-foster-lion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக