தன் நினைவின்றி இருக்கும் சித்தார்த்தை வீட்டுக்குக் கொண்டு வருகிறாள் ஹர்ஷிதா. அபி, அனு இருவரின் போன்களும் அணைக்கப்பட்டிருக்கின்றன. வெளியே சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. வேறு வழியின்றி, சித்தார்த்தை அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
“இவரை பப்ல பார்த்தேன். எப்படி விட்டுட்டு வர்றது? அபி வீட்ல இல்ல. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று பார்ட்னரிடம் சொல்கிறாள் ஹர்ஷிதா.
காலையில் ஹர்ஷிதா வீட்டுக்கு வாட்ச்மேனுடன் வருகிறார் அபார்ட்மென்ட் செகரட்டரி. அப்போது சித்தார்த் வீட்டுக்கு உள்ளே இருந்து வாசலுக்கு வருகிறான். அதைப் பார்த்த செகரட்டரி, “என்ன இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க? சித்தார்த் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். இங்கே நல்ல குடும்பங்கள் இருக்கிற இடம். பக்கத்துலேயே உங்க வீடு இருக்கும்போது இந்த வீட்டில் எப்படி? சே... பார்த்து நடந்துக்குங்க” என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்.
“இருங்க... இப்ப என்ன தப்பா நடந்துருச்சு, நீங்க அட்வைஸ் பண்ற அளவுக்கு? வீட்டுக்குள்ள இருந்து வந்தா நீங்களா கற்பனை பண்ணிப்பீங்களா?” என்று ஹர்ஷிதா கேட்டுக்கொண்டிருக்கும்போதே; செகரட்டரி கோபமாகச் சென்றுவிடுகிறார். சித்தார்த்தும் கிளம்புகிறான்.
விடுதி அறையில் கெளசல்யாவும் அவர் கணவரும் காத்திருக்கிறார்கள். “போன் ஆஃப் பண்ணிட்டே. நைட் எல்லாம் எங்கே தங்கிட்டு வர்றே? உன்னை இப்படித் தனியா விட மனசு கேட்கல. அதான் வந்தேன்.”
கெளசல்யாவின் கணவர், `குடிச்சிருக்கிறாயா' என்று சித்தார்த்திடம் கேட்க, கெளசல்யா பதறுகிறார். “இந்தப் பழக்கம் எல்லாம் எப்படா வந்துச்சு? குடிச்சா சரியாயிருமா?” என்று அவர் கேட்பது சரியான கேள்விதான். ஒரு பெண் பிரச்னையைக் குடிக்காமல் சமாளிக்கும்போது, ஓர் ஆணால் மட்டும் அது முடியாதா?
நடந்த விஷயங்களைச் சொல்கிறான் சித்தார்த். “ஏன் இப்படி இருக்கே? அதுவும் அவளுங்க முன்னாடி இப்படி அசிங்கப்பட்டு கிடக்கே? சரி கிளம்பு, வக்கீலைப் பார்க்கலாம்” என்கிறார் கெளசல்யா. `வக்கீலைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது' என்கிறார் அவர் கணவர்.
நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட கெளதம், “ஒண்ணு கவனிச்சீங்களா? எந்த விஷயத்துக்காக இவ்வளவு தூரம் சண்டை போட்டாரோ, இப்ப அதே விஷயத்தை அவரும் செஞ்சிருக்கார். இதை வச்சு உங்களைப் புரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன்” என்கிறான்.
“அவர் புரிஞ்சுக்கணும்னு எல்லாம் நான் நினைக்கல. குடிச்சதை நினைச்சுதான் வருத்தப்படறேன்.”
“இப்பதான் நிம்மதியா இருக்கறதா சொன்னீங்க, அப்புறம் அவர் குடிச்சதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?” என்கிறான் கெளதம்.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-72
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக