திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மனைவி காஞ்சனா கட்கரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் நினைவிடம். இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா ஐந்து நாள்கள்வரை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாள்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்த ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் திட்டமிடப்பட்டது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக குறைந்தளவிலான இசைக் கலைஞர்கள் மட்டுமே பஞ்சரத்தின கீர்த்தனையில் பாடுவதற்கு அனுமதிக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று (2.2.21) முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 5:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, இசைக் கலைஞர்கள் தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர். இதையடுத்து காலை 8:30 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், பிறகு, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசை நடைபெற்றது.
பின்னர் சரியாக 9:00 மணிக்கு, பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்ட ஏராளமான இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் இசைக் கருவிகளை இசைத்தபடி ஒருமித்த குரலில், பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
அப்போது தியாகராஜர் சிலைக்குப் பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால்,அபிஷேகங்கள் நடந்தப்பட்டன. பின்னர் ஸ்ரீ தியாகராஜர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதணை காட்டப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் 'ஸ்ரீதியாகராஜா' என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
இதில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மனைவி காஞ்சனா கட்கரி மற்றும் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
விழா மேடையில் அமர்ந்தபடி காஞ்சனா கட்கரி பஞ்சரத்ன கீர்த்தனையை ரசித்தார். அவரிடம் ஆராதனை விழாவின் சிறப்புகள் குறித்து ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/spiritual/news/central-minister-nitin-gadkari-wife-participated-in-thiyagarajar-aarathanai-vizha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக