கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கொரோனா பேரிடர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 29-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது குறித்து தி.மு.க எம்.பி வில்சன் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ``தமிழகத்துக்கு 195 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர், தஞ்சை, நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் என ஐந்து இடங்களில் விமான நிலையங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த இடங்களில் விமான சேவை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ``ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், தஞ்சைக்கு ரூ.50 கோடி, வேலூருக்கு ரூ.44 கோடி, நெய்வேலிக்கு ரூ.30 கோடி, ராமநாதபுரத்துக்கு ரூ.36 கோடி, சேலத்துக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சில விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், அந்த விமான நிலையங்களில் முறையான அனைத்து சேவைகளும் இல்லை. சிறிய விமான நிலையங்களை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது" என்று பதிலளித்தார்.
source https://www.vikatan.com/news/politics/union-government-allotted-rs-195-crore-for-tn-over-new-airports-says-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக