Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

அக்ஸர், அஷ்வின்... ஸ்பின்னர்களால் முடிந்த இங்கிலாந்தின் கதை! INDvENG

''இரண்டு நாள் டெஸ்ட்டா?'' எனக் கிண்டல் அடித்திருக்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன். முதல் இரண்டு செஷன்களுக்குள்ளாகவே இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா 99 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழக்க அஹமதாபாத் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவுக்கு வந்திருக்கிறது. ரோஹித் ஷர்மா 57 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.

''பிங்க் பால் டெஸ்ட்னாலே கொஞ்சம் பயம்'' என்பதுதான் இந்தியா, இங்கிலாந்து என இரு அணிகளின் நிலைமையும். கடைசியாக விளையாடிய பிங்க் பால் டெஸ்ட்டில் இங்கிலாந்து, நியூஸிலாந்துக்கு எதிராக 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்க, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தது. அதனால் கலக்கத்துடனேயே போட்டி ஆரம்பமானது.

டாஸை வென்ற ரூட், எதிர்பார்த்ததைப் போலவே, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்தியாவின் தரப்பில், சிராஜுக்கு பதில் பும்ராவும், குல்தீப்புக்கு பதில் பேட்டிங் லைன் அப்பை வலுப்படுத்தும் நோக்கோடு வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டிருக்க, இங்கிலாந்தின் பக்கம், பர்ன்ஸ், லாரன்ஸ், மொயின் அலி, ஸ்டோனுக்கு பதிலாக, க்ராலி, பேர்ஸ்டோ, ஆன்டர்சன், ஆர்ச்சர் ஆகியோர் இணைந்து ஒரு பலமான பிளேயிங் லெவனாகக் களமிறங்கினர்.

தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்தோடு தொடங்கினார் கோலி. தொடக்கம் முதலே, டாஸை இழந்திருந்தாலும், இன்றைய நாள் எங்களது நாள் எனத் துல்லியமான லைன் மற்றும் லென்த்தில் பந்துகளை வீசினர் இந்திய பௌலர்கள். அதற்குக் கைமேல் பரிசாக, மூன்றாவது ஓவரிலேயே, இஷாந்த் வீசிய பந்தில், ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து, ரன் எதுவும் எடுக்காமல், சிப்லி வெளியேற, அமர்க்களமாய்த் தொடங்கியது இந்தியா. உண்மையில், ஒன்பிட்சாகிப் போக வேண்டிய பந்து, களம் கைகொடுக்க, அதிகமான பவுன்சினால், ரோஹித் கையில் தஞ்சமடைந்திருந்தது.

பேர்ஸ்டோ உள்ளே வந்தார். மறுபுறம் க்ராலி அச்சமின்றி அடித்து ஆடிக் கொண்டிருந்தார். அடுத்த தாக்குதலை நிகழ்த்தும் நோக்கோடு, கோலி, அக்ஸரைக் கொண்டு வந்தார். கடந்த இரண்டு போட்டிகளில், ஒரு புது ஸ்பெல்லை கோலி தொடங்கிய போதெல்லாம், விக்கெட் வீழ்ச்சி வாடிக்கையாய் இருந்தது. அதேதான் இன்றும் நடந்தது. அக்சர் வீசிய முதல் பந்தே, அதிகமாக டர்ன் ஆக, டிஃபென்ஸ் ஆட முயற்சித்து, எல்பிடபிள்யூவில் வெளியேறினார், பேர்ஸ்டோ. ரூட் உள்ளே வந்தார்.

அக்ஸர் பட்டேல்

இதற்கடுத்த சில ஓவர்கள், பௌலர்களின் பொறுமையைச் சோதித்தது இந்த இருவரணி. அஷ்வின் - அக்சர் என இருவரையும் இருபக்கமும் கோலி சுழல வைக்க, அடுத்த சில ஓவர்களில், ரூட்டின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்த, இனி எங்கள் ஆட்டம் ஆரம்பம் என அசத்தத் தொடங்கியது இந்தியா. ஸ்டோக்ஸ் உள்ளே வந்தார்.

அடுத்த மூன்று ஓவர்களிலேயே, மறுபுறம் அரைச்சதத்தைக் கடந்து அசத்திக் கொண்டிருந்த க்ராலியின் விக்கெட்டை அக்ஸர் வீழ்த்தி மிரட்ட, 80/4 என திணறத் தொடங்கியது இங்கிலாந்து. தேநீர் இடைவேளையின் போது, இங்கிலாந்து தன் கணக்கில் 81 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது!

இரண்டாவது செஷானாவது நமக்கு சாதகமாக அமையுமா என்ற இங்கிலாந்தின் எதிர்பார்ப்புக்கு, அடுத்தடுத்த ஓவரில் மரண அடி கொடுத்தனர், இந்த சுழல் சூறாவளிகள். போப்பை போல்டாக்கி அஷ்வின் அனுப்பி வைக்க, ஸ்டோக்ஸை, அக்ஸர் எல்பிடபிள்யூவில் வெளியேற்றினார் உணவு இடைவேளைக்கு பின், 11 பந்துகளில், இங்கிலாந்து ஒரு ரன்கூட எடுக்காமல், இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபநிலையில் இருந்தது.

ஆறு விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தாலும், இந்திய பௌலர்கள், டெயில் எண்டர்களை முடிக்காதவரை எந்தக் கொண்டாட்டமும் அவசியமற்றதே என்ற ரசிகர்களின் பயத்தை, அடுத்த சில ஓவர்களிலேயே பொய்யாக்கி, ஆர்ச்சரை போல்டாக்கினார் அக்ஸர்!

அடுத்ததாக வந்த லீச்சை, இம்முறை என் முறை என அஷ்வின் அவுட்சைட் பந்தில் தூண்டிலாக வீசிய பந்தின் வாயிலாகப் பொறிவைத்துப் பிடிக்க, புஜாராவிடம் கேட்ச் கொடுத்து, ஆட்டமிழந்தார் லீச். இன்னும் ஒரு ஸ்பின் பௌலரை சேர்த்து எடுத்திருக்கலாமோ, என்ற எண்ணம் கண்டிப்பாக இங்கிலாந்தின் பக்கம் எழுந்திருக்கும்.

இரண்டு இலக்க ஸ்கோரோடு விடைபெற வேண்டிய இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை, 100 ரன்களுக்குக் கொண்டு போனார் பிராட். அணியை மீட்க அவர் போராடியதெல்லாம் வீணாய்ப் போக, அக்ஸர் பிராடின் விக்கெட்டை வீழ்த்தி, தனது ஐந்து விக்கெட் ஹால் கொண்டாட்டத்தைத் தொடங்கினார். இறுதியாக, ஃபோக்ஸின் விக்கெட்டையும் அவரே வீழ்த்தினார். ஆறு விக்கெட் அக்ஸர் ஆனார்.

சென்னையில் தனது சொந்த மண்ணில், கடந்தப் போட்டியில், அஷ்வின் காட்டிய சுழல் மாயாஜாலத்தை, இம்முறை, தனது தாய் மண்ணில், அக்ஸர் காட்டி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் என்ற மூன்றாவது ஸ்பின் பௌலரை பயன்படுத்தாமலேயே, இரண்டு பௌலர்களைக் கொண்டே, இங்கிலாந்தின் கதையை முடித்து விட்டது இந்தியா. இங்கிலாந்து அடித்திருந்த ஸ்கோரான 112 ரன்களில், 47 சதவிகிதம் க்ராலியுடையது. விழுந்த பத்து இங்கிலாந்தின் விக்கெட்டுகளில், ஆறு பேட்ஸ்மேன்கள், ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறி இருந்தார்கள்.

தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது, இந்தியா. ரோஹித் மற்றும் கில்லின் ஓப்பனிங்குடன் நாளைத் தொடங்கிய இந்தியா, உணவு இடைவேளையின் போது, ஐந்து ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி ஐந்து ரன்களை எடுத்திருந்தது. முதல் இரண்டு செஷன்களையும், தனது பெயரில் எழுதிக் கொண்ட இந்தியா, கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது.

ரோஹித் ஷர்மா

மூன்றாவது செஷனை, பிராட் மற்றும் ஆன்டர்சனுடன் தொடங்கியது இங்கிலாந்து. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் இந்திய ஓப்பனர்கள். மற்ற இங்கிலாந்து பௌலர்களின் வேகத்தைத் தாக்குப்பிடித்து ஆடிக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியை, ஆர்ச்சர், கில்லை ஆட்டமிழக்கச் செய்து பிரித்துக் காட்டினார். அந்த பேரதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் அடுத்த அடியாக, உள்ளே வந்த புஜாராவை, வந்த வேகத்தில் லீச் அனுப்பி வைக்க, 34/2 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்தியா.

அடுத்ததாக, புதிதாய்க் கைகோத்த ரோஹித் - கோலி கூட்டணி மிக கவனத்துடன் பந்துகளை எதிர்கொள்ளத் தொடங்கியது. இந்த இருவரும் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் களமிறங்காத இங்கிலாந்தின் தவறை, மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்டுவதைப் போல ஆடத் தொடங்கினர்.

போன போட்டியில் நடந்ததைப் போலவே, இங்கிலாந்து பௌலர்களை லாவகமாக எதிர்கொண்டார் ரோஹித். "என்னையா டெஸ்ட் மெட்டீரியல் இல்லை என்று சொன்னீர்கள்!?" என்னும் தோரணையில் இருந்தது அவரது ஆட்டம். அற்புதமாக ஆடி, அவர் அரைச்சதத்தைக் கடக்க, மறுபுறம் கோலியின் ஆட்டமும், நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது.

இந்தக் கூட்டணி ஐம்பது ரன்கள் பார்ட்னர்ஷிபைக் கடந்த பிறகு, போப், கோலியின் கேட்சை ஒருமுறையும், ரோஹித்தின் கேட்சை ஒருமுறையும் கைவிட, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் மீது போயிருக்க வேண்டிய அழுத்தத்தை, தங்கள் பக்கமே திருப்பிக் கொண்டார் போப். இதற்குப் பின் ஸ்டம்பிங்கிற்குரிய தீர்ப்பும் ரோஹித்திற்கு சாதகமாக வர, தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தார் ரோஹித்‌.

எனினும் போட்டியின் கடைசி ஓவரில் கிங் கோலியின் விக்கெட்டை லீச் வீழ்த்த, நேர்மறைக் குறிப்போடு, முதல் நாளை முடிவுக்குக் கொண்டு வந்தது இங்கிலாந்து. இந்தியா, 99/3 என இங்கிலாந்தை விட, 13 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில், வலிமையாக முடித்திருக்கிறது.

இந்தியாவின் சுழல் சூத்திரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், சொற்ப ரன்களில் சுருண்ட இங்கிலாந்து, க்ராவ்லியின் அரைச்சதத்தால் முட்டிமோதி, 100 ரன்களைக் கடந்தது. பௌலர்கள் அமைத்துத்தந்த பாதையில் இந்திய பேட்ஸ்மேன்கள், நாளை, வீறுநடை போட்டால், அப்பாதையை இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நீட்டலாம்!



source https://sports.vikatan.com/cricket/india-dominates-the-first-day-against-england-at-ahmedabad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக