Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

“எங்களுக்கான பங்கை கொடுங்கள்” - ஓ.பி.எஸ்-ன் அழுத்தமான வாதமும்... பா.ஜ.க.வின் விரிவான விளக்கமும்

அ.தி.மு.க அரசின் இறுதி பட்ஜெட்... சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே 15வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழக துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உயர்கல்வித்துறை, விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை என அனைத்திற்கும் இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் என்றாலே நிதி ஒதுக்கீடுகளை மட்டுமே கொண்டிருக்கும் என்பதில் இருந்து மாறி மாற்றுத்திறனாளிகளுக்கான ‘RIGHTS’ என்ற புதிய திட்டம், காப்பீட்டுத் திட்டத்திங்களில் மாற்றங்கள், ஆய்வு அளவில் இருந்த கோவை மெட்ரோவுக்கான நிதி ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகை எனப் பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

கொரோனா சூழலில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என்று அ.தி.மு.க-வினர் பெருமை பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில், “அ.தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி ரூபாய். அதாவது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் 62,000 கடன் இருக்கிறது” என்று பெரும் இடியை இறக்கியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

Also Read: பட்ஜெட் 2021-22... பாசிட்டிவ் என்ன, நெகட்டிவ் என்ன? சொல்கிறார்கள் நிபுணர்கள்

மேலும் அவர் “தி.மு.க ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம் அ.தி.மு.க ஆட்சியில் 7.2 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது 93,737 கோடி ரூபாய் வருமானச் சரிவு தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது” என்றும் விமர்சனம் செய்துள்ளார். தமிழக வரலாற்றில் கடன் வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான் என்றும் விமர்சித்துள்ளதோடு மக்களின் வரிப் பணத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னைப் புகழ்ந்து விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். “தேர்தலுக்குமுன் பணிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழக அரசு ஏன் டெண்டர் விட்டது” என்றும் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் விமர்சனம் உண்மை எனும் அளவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பட்ஜெட் உரையில், “தமிழக அரசின் கடன் 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று அறிவிப்பு செய்தது கொஞ்சம் திகிலைக் கிளப்பத்தான் செய்தது. மேலும் “கொரோனா காலத்தில் போக்குவரத்து கழகங்களில் சுமார் 3,717.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். “14வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையே மத்திய அரசு இன்னும் சரிசெய்யாதபோது 15வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் தமிழகத்திற்கு உரிய பலன் கிடைக்கும் என்று நம்பவில்லை” என மத்திய அரசின் செயல்பாட்டின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, “வருமான வரி, பெட்ரோல், டீசல் வரி ஆகியவற்றில் மத்திய அரசு விதித்த கூடுதல் வரியில் மாநிலங்களுக்கான பங்கை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

மேலும், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மானியத்தின் பங்கை 90% லிருந்து 40ஆக மத்திய அரசு குறைத்துவிட்டது. நிவர், கஜா போன்ற பேரிடர்களுக்கும் தமிழகத்திற்குப் போதுமான நிவாரணத் தொகையை மத்திய அரசு அளிக்கவில்லை. புயல் உள்ளிட்ட பேரிடர்களுக்கு மாநில அரசு 11,943 கோடி செலவிட்ட நிலையில் மத்திய அரசு வெறும் 1,020 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக அரசுக்கு எதிர்பார்த்ததைவிட மூன்று மடங்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என மத்திய அரசின் மீது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வாசித்துள்ளார்.

தமிழகத்தின் மீதுள்ள கடன்சுமை, நிதிப்பற்றாக்குறை போன்றவற்றிற்கு மத்திய அரசு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யாததே காரணம் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

“இதுவரையிலும் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி பங்குகளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழுமையாகப் பகிர்ந்து அளித்துள்ளது. அதேபோல பேரிடர், கொரோனா கால இழப்பீடுகளையும் கடந்த மாதம் வரையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இழப்பீடு, பங்கு என்பதில் மாநிலங்கள் மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் அளவீடு என்பதில் தான் பிரச்னை இருப்பதாக நிதித்துறை செயலாளர் கூறுகின்றார். அந்த அளவீடு என்பது மாநில அரசுகள் மத்திய அரசிடம் தங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால், மத்திய அரசு மாநிலங்கள் எதிர்பார்க்கும் அளவீட்டை உரிய முறையில் கணக்கீடு செய்து நிச்சயம் வழங்கிவிடும். பெட்ரோல், டீசல் விலை உயரும் போது மத்திய அரசின் கலால் வரி உயராமல் நிலையாக இருக்கும். ஏனெனில் அது ரூபாய் மதிப்பில் இருக்கிறது. ஆனால், விழுக்காட்டின் அடிப்படையில் வரி விதிப்பதால் தான் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் மாநில அரசுகள் விதிக்கும் வரியும் உயரும். இதனால்தான் பெட்ரோல், டீசல் விலையே உயருகிறது. முன்பு 32%-ஆக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் மானியப் பகிர்வு தற்போது 42% ஆகிவிட்டது. மத்திய அரசிடம் இருந்து அதிகமான பகிர்வு வரும் போது மானியம் குறையத்தானே செய்யும்.

நாராயணன் திருப்பதி

உள்ளாட்சி மானியங்களைப் பொறுத்தவரை உரிய காலங்களில் தேர்தல் நடத்தவில்லை என்றால் மானியம் நிறுத்தப்படும் என சட்டமே உள்ளது. உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால்தான் மானியம் நிறுத்தப்பட்டது. உடனடித் தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் பேரிடர் நிவாரண நிதி. இந்தப் பேரிடர் நிவாரண நிதியைக் கடந்த ஏழு ஆண்டுகளில் 5 மடங்காக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதிகமாக பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பேரிடர் கால இழப்புகளுக்கு அந்தந்த துறை ரீதியிலான ஒதுக்கீடுகளும் மத்திய அரசிடம் இருந்து முறையாக வழங்கப்படும்” என்றார் விளக்கமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/give-our-share-in-taxes-opannerselvam-asks-central-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக