Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

நவ்ரூ தீவு: தனது செல்வத்தை விற்று திவாலான நாடு! | நாடுகளின் கதை - 1

வாக்கிங் போகலாம் வாறீங்களா? ஒரே நாளில் ஒரு முழு நாட்டையும் சுற்றிப் பார்த்து விடலாம். உலகில் அப்படியொரு நாடு! அதுவும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற நாடு!

இந்த நாட்டின் பரப்பளவு எவ்வளவு என்கிறீர்களா? 21 சதுரகிலோ மீட்டர். கற்பனைக்கு போகாதீர்கள்... நம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகர் அளவுதான். ஆனால் மக்கள் தொகை புதுக்கோட்டை மக்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்குதான்!

ஆமாம், வெறும் பத்தாயிரம் மக்கள்தான். இந்த நாடு எது எனக் கேட்கிறீர்களா?

'நவ்ரூ'- உலகின் மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு!

அதிகாரப்பூர்வ தலைநகர் இல்லாதிருந்த இந்நாட்டில் யாரென் என்ற இடம் தலைநகர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போய்வரலாமே... இந்த நாடு எங்கேயிருக்கு?!

எங்கு இருக்கிறது?

நவ்ரூ தீவு

ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கி.மீட்டர் தொலைவில் இந்த நாடு இருக்கிறது. கிட்டத்தட்ட கன்னியாகுமரியிலிருந்து டெல்லி தூரம். ஆனால், இந்நாடு கடலில் அமைந்துள்ளது. எத்தனையோ அதிசயங்களை தன்னில் கொண்டுள்ள பசுபிக் பெருங்கடலில்தான் இந்த தீவு நாடும் அமைந்துள்ளது

சிறிய தீவாக இருந்தால் என்ன? பெரிய நாடாக இருந்தால் என்ன? ஐரோப்பியர்கள் எதைத்தான் விட்டுவைத்தார்கள்? அதிலும் பிரிட்டன் உலகையே ஆண்ட நாடு! சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் எனப் பல நாடுகளையும் அடிமைப்படுத்தி ஆண்டவர்கள்.

பிரிட்டனின் திமிங்கல வேட்டை பிரியரான ஜோன் பேர்ன் 1788ல் இந்த நாட்டில் கால்வைத்த போது இனிமையான தீவு எனப் பெயரிட்டார்... அவ்வளவு வளம்... இயற்கையின் கண்கொள்ளாக் காட்சி! அழகான கடற்கரை அவர் பெயர் வைத்ததில் தப்பில்லை; ஆனால், யாருடைய கண்ணோ பட்டுவிட்டது. இனிமை போய் சோகம் ஆட்கொண்டுவிட்டது.

குடிநீரும், திமிங்கலமும்!

ஜோன் பேர்ன் கால் வைத்ததற்கு 40 ஆண்டுகளுக்குப் பின் நல்ல நீர் பெறுவதற்காக கப்பல்கள் இத்தீவில் நங்கூரம் பாய்ச்சின. திமிங்கல வேட்டையர்கள் எண்ணற்றோர் வந்து தங்கினர்.

ஐரோப்பியர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும், நாடுகளை வளைத்துப் போட்ட அவர்களுக்கு நபர்கள் எம்மாத்திரம்?

மதுவகைகளை ஆசைகாட்டினர், துப்பாக்கிகளில் ஆர்வமூட்டினர். இவற்றில் மயங்கிய நவ்ரூ மக்கள் தமது உணவுப் பொருள்களை கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.

இதனால், நவ்ரூ மக்களுக்கு மதுவால் போதை! தூப்பாக்கிகளை இயக்குவதில் ஆசை! விளைவு?

அங்கு வாழ்ந்த 12 இனங்களுக்கிடையே 1878ம் ஆண்டு சண்டை தொடங்கியது. 10 ஆண்டு நீடித்த இந்த சண்டையில் அந்த நாட்டில் வாழ்ந்த மக்களில் மூன்றில் ஒருபங்கினர் கொல்லப்பட்டனர்.

இப்படி உயிர் இழப்புகள் ஏற்பட்டதுக்குப் பின் சிறிய அளவில் காவல் துறை உருவாக்கப்பட்டது. ஆனால், நாட்டைப் பாதுகாக்க ராணுவப்படை இல்லை. இப்போது இந்நாட்டின் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில்!

நவ்ரூ தீவு

அபரிவிதமான செல்வம்

நவ்ரூ ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் வளமான நாடக இருந்ததற்கு காரணம் அந்நாட்டில் அபரிமிதமாக கிடைத்த பாஸ்பேட். உரம் தயாரிப்பதற்கு இது மூலப்பொருள் என்பதால் பல நாடுகளின் பார்வையும் இதன் மேல் விழுந்தது.

யார் கேட்டால் என்ன? தங்கள் நாட்டின் மேற்பரப்பில் அனைத்துமே பாஸ்பேட் பாறைகள்தான். வருமானத்திற்காக அவற்றை வெட்டி எடுக்கும் உரிமையை தாராளமாக வழங்கியது நவ்ரூ. இதனால் அங்கே கனிம வளம் குறைந்து கொண்டே வந்தது. இதனிடையே இரண்டாம் உலகப் போர்! இந்த நாட்டின் இயற்கை வளம் ஜப்பானின் கண்களை உறுத்தியது; நவ்ரூ அந்நாட்டின் வசமானது. போரில் ஜப்பான் வீழ்த்தப்பட்டதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் நவ்ரூ கொண்டு வரப்பட்டது.

கடைசியாக பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழிருந்து 1968ல் விடுதலை பெற்றது. ஜனவரி 21, 1968 சுதந்திரதினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கருநீல நிறத்தில் 12 கால்களைக் கொண்ட வெள்ளை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடி. இதில் தங்க நிறத்தில் ஒரு கோடு. இதுதான் இந்த நாட்டின் தேசியக் கொடி.

பசுபிக் பெருங்கடலைக் குறிக்க கரு நீலநிறம், 12 இனங்களைக் குறிக்க 12 கால்கள் கொண்ட நட்சத்திரம். எல்லாம் சரிதான். நாட்டின் தலையெழுத்து சரியில்லாமல் போய்விட்டதே!

சுதந்திரம் அடைந்த புதிதில் தனிநபர் வருமானம், நாட்டின் வரி வருவாய் எல்லாம் பிறநாடுகள் பொறாமைப்படும் அளவில் இருந்தது. வருமானத்தை மேலும் பெருக்க, வரம்புமீறி பாஸ்பேட் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது. சுரங்கத் தொழில் பெருகப் பெருக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கனிமவளம் வெட்டி எடுக்கப்பட அது அந்த நாட்டின் சூழலியலில் ஒரு பெரும் தாக்கத்தை செலுத்தியது. ஆம், நவ்ரூவின் வரலாறு ஒரு சபிக்கப்பட்ட கதையாக மாறியது. ஒரு சமயத்தில் பசிபிக் பெருங்கடலில் சொர்க்கமாக இருந்த அந்த பகுதி மெல்ல நகரமாக மாறியது.

வங்கியில் பணம் போட்டுவிட்டு அதிலிருந்து வரும் வட்டியில் வாழலாம். ஆனால், கேப்பிடலில் கைவைத்தால், அதாவது மூலதனத்தை அழித்தால் என்ன ஆகும்? போண்டியாக வேண்டியதுதானே? ஆம். அதுதான் நடந்தது நவ்ரூ தீவுக்கும்.

நவ்ரூ தீவு

போண்டியான தேசம்

வெட்டி எடுக்க எடுக்க கனிம வளமும் குறைந்தது. அடுத்த ஓரிரு பத்தாண்டுகளில் கனிம வளமே இந்நாட்டில் இருக்காது. வருமானம் பாதித்தால் வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப்பறிமாற்றம் அதிகரித்தது.

ஒரு காலத்தில் இனிமையான தீவாக இருந்த இந்நாட்டின் சோகக்கதை உலக மக்களின் மனக்கதவை தட்டுகிறது. இத்தீவைச் சுற்றி பவளப்பாறைகள் உள்ளதால் துறைமுகள் உருவாக்க முடியவில்லை. வளங்கள் சுரண்டப்பட்டு வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதால் விலங்குகள், பறவைகள் அரிதாகிவிட்டன. தாவரங்களும் குறைந்து விட்டன். இந்த நாட்டில் பொதுப் போக்குவரத்து இல்லை. சுற்றுலாப்பயணிகள் வருகையும் இல்லை.

2012 முதல் நவ்ரூ ஆஸ்திரேலியாவின் அகதிமுகாமாக மாறிவிட்டது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் பெறும் நோக்கோடு சட்ட விரோதமாக நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு நவ்ரூவில் உள்ள அகதிமுகாம்களில்தான் அடைக்கப்படுகின்றனர். இந்த அகதி முகாம்கள்தான் நவ்ரூ மக்களின் ஒரே வேலைவாய்ப்பு.

ஆனால், இந்த தடுப்பு முகாம்களில் நடைபெறும் சித்ரவதைகளும், உயிரிழப்புகளும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 8 முதல் 10 வயதுடைய சிறுவர்களிடம் கூட தற்கொலை எண்ணம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்காக ஆஸ்திரேலிய மக்களும் போராடி வருகின்றனர்.

நவ்ரூ தீவு

தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தியுள்ள நவ்ரூவுக்கு ஆஸ்திரேலிய அரசே நிதியுதவி வழங்குகிறது. செய்திப்பத்திரிக்கை எதுவும் வெளிவராத இந்நாட்டில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு மது அருந்துவதுதான்.

நம்புங்கள் உலகிலேயே உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழும் நாடு நவ்ரூ தான். இந்நாட்டின் மக்கள் தொகையில் உடல் பருமானவர்கள் 72 சதவீதம்.

இந்த சிறிய நாட்டின் பெரிய சோகத்திற்கு மத்தியில் ஒரு நல்ல விஷயம், கொரோனா யாரையும் தொற்றாததுதான். ஆம், உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி அங்கு இதுநாள்வரை ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

- பயணிப்போம்...



source https://www.vikatan.com/lifestyle/international/the-history-of-nauru-island-the-worlds-smallest-independent-republic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக