Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

சென்னை: குளிர்பானத்தில் மயக்க மருந்து; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - நடிகை புகார்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன்னிடம் கல்லூரி ஒன்றின் உரிமையாளர் தவறாக நடந்துகொண்டதாக சமீரா (22) என்ற நடிகை புகாரளித்திருக்கிறார்.

நடிகை சமீரா

புழல் காவல் நிலையத்தில் அளித்த அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கூறிய விலாசத்தில் என் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். எனது சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராமபட்டினம். நான் சினிமாதுறையில் நடித்துவருகிறேன். நான் `எதிராளி' என்ற படத்தில் ஹீரோயினராக நடித்திருக்கிறேன். தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளரான கோவிந்தராஜ் என்பவர் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க என்னை அணுகினார்.

நான், அதற்கு சம்மதித்தேன். அதன்படி அந்தப் படத்துக்கான ரிகர்சலில் நடிப்பதற்காக என்னை அழைத்தார்கள். நான் அங்கு நடிப்பதற்காகச் சென்றேன். அப்போது எனக்கு அளித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மேலும், அதை வீடியோ படம் எடுத்து இணையத்தில் பரப்பிவிடுவதாகக் கூறி என்னை கோவிந்தராஜ் மிரட்டினார். அது சம்பந்தமாக நான் சென்னை கமிஷனரிடம் புகாரளித்தேன். அது தற்போது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது.

Also Read: `பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்!' - சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு, `கோவிந்தராஜ் மீது நான் கொடுத்த புகாரைத் திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் நீ எனக்குப் பணம் தர வேண்டும் என்று பொய் புகார் அளிப்பேன்’ என்று கூறினார். நான், `என்னால் முடியாது’ என்று கூறிவிட்டேன். அதன் பிறகு ஜெயக்குமார் என்பவர் என்மீது கடந்த செப்டம்பர் 2019-ல் புகாரளித்தார். நான் புகாரில் ஆஜராகி எந்தவிதப் பணமும் வாங்கவில்லை என்று விளக்கிக் கூறினேன். எனவே, காவல்துறையினர் நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் 17.2.2021-ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் நான் வீட்டிலிருந்தபோது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் என்னையும் எனது தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்பு ஜெயக்குமார் என் கழுத்தைப் பிடித்து நெரித்து, `கோவிந்தராஜ் சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும். இல்லையெனறால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார். அப்போது ஜெயக்குமார் உடனிருந்த நக்கீரன் மற்றும் வேறு இரு ஆண்கள் சேர்ந்து தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினர்.

நடிகை சமீரா

பின்னர் பூர்ணிமாவும் மூன்று பெண்களும் சேர்ந்து என் கன்னத்திலும் முகத்திலும் அடித்தனர். நான் செய்வதிறியாது காவல்துறை அவசர நம்பருக்கு அழைத்து புகாரளித்தேன். உடனே காவல்துறையினர் வந்து என்னை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். நான் காவல் நிலையம் வந்து புகாரளித்தேன். எனவே, என் புகாரை ஏற்றுக்கொண்டு கோவிந்தராஜ், ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய எட்டுக்கும் மேற்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரின்பேரில் புழல் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 147, 447, 448, 294(b) தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து புழல் போலீஸார் கூறுகையில், ``நடிகை சமீரா அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறோம். புகாரில் குற்றம் சாட்டியிருக்கிற கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதன் பிறகுதான் இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்குச் செல்லும்" என்றனர்.

எஃப்.ஐ.ஆர்

ஜெயக்குமாரிடம் பேசியபோது, புகார் தொடர்பாக சிறிது நேரத்துக்குப் பிறகு விரிவாகத் தகவல் சொல்கிறேன் என்று கூறினார். இந்தச் செய்தி வெளியிடும் வரை அவர் பேசவில்லை. அவர் தரப்பு விளக்கத்தை அளிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/news/crime/actress-files-sexual-harassment-complaint-against-engineering-college-chairman-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக