நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. முதற்கட்டமாக, முன்கள வீரர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நிர்ப்பந்திப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த 30-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு ஒன்றினை அளிக்க பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் பொன்னையா வெகு நேரமாகியும் வராததால் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமியைச் சந்தித்து தங்கள் புகார் மனுவினை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் புகார் மனு குறித்து விளக்கினர். அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவி லட்சுமி,``நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தற்போது முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்குப் போடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரும் அவரவர் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறோம்.
திருவள்ளூர் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டோம் என்று கூறவில்லை.
ஆனால், இப்படிக் கட்டாயப்படுத்தி மிரட்டுவது முறையல்ல. சிலர் கொரோனா தடுப்பூசி என்றாலே பயப்படுகின்றனர். அப்படி இருப்பவர்களிடத்தில் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமே தவிர, அதிகாரிகள் பணி நீக்கம் செய்து வீட்டிற்கு விரட்டுவோம் என்று மிரட்டக்கூடாது.
Also Read: சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம்... விருது வழங்கி கெளரவித்த முதல்வர்!
ஆனால், ஆட்சியர் தற்போது அலுவலகத்தில் இல்லை. அதனால், எங்கள் புகார் மனுவினை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமியிடம் அளித்திருக்கிறோம். அவர் எங்கள் புகார் மனு தொடர்பாக விசாரிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/anganwadi-workers-files-complaint-against-officials-over-compulsory-corona-vaccination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக