மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன். கலப்பை தயார் செய்யும் தொழில் செய்து வந்தவர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் அழகேந்திரனையும் குழந்தைகளையும் அவரின் மனைவி பேச்சியம்மாள் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். மேலும், அழகேந்திரனுக்கு சர்க்கரை நோய் அதிகமான காரணத்தால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையும் அளித்தார்.
தங்களது வீட்டிலிருந்த பால் மாட்டை விற்று தன் கணவருக்கு மருத்துவம் பார்க்கும் சூழலுக்கு பேச்சியம்மாள் வந்தது தொடர்பாக விகடன் தளத்தில் 'பால்மாட்டை விற்று கணவருக்கு மருத்துவம் பார்க்கும் மனைவி' - உதவி கிடைக்காமல் தவிக்கும் அவலம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இதைத் தொடர்ந்து கரூர், 'இணைந்த கைகள்' மற்றும் 'ஒன் ஸ்டெப்' அமைப்புகள் சேர்ந்து முன்வந்து, அழகேந்திரன் குடும்பத்துக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை சில மாதங்கள் அளித்து வந்தனர். இந்த சூழலில், சிகிச்சைப் பலனின்றி அழகேந்திரன் உயிரிழந்தார்.
தற்போது, பேச்சியம்மாள் கூலி வேலைகளுக்குச் சென்று தன் இரண்டு பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார். போதிய வருமானமின்றி அவர் தவிப்பது குறித்து, 'பசியாற்று' வாட்ஸ்அப் குழு நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தோம். பேச்சியம்மாள் தனது வருவாயை பெருக்கிக்கொள்ள உதவும் வகையில் 10,000 மதிப்புள்ள இரண்டு ஆட்டுக்குட்டிகளை அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர் 'பசியாற்று' வாட்ஸ்அப் குழு நண்பர்கள்.
இதுகுறித்து பேச்சியம்மாள் பேசும்போது, "எங்க வீட்டுக்காரருக்கு சர்க்கர நோய் தீவிரமா இருந்துச்சு. முடிஞ்சவர ஆஸ்பத்திரியில பார்த்தோம். வீட்டுல இருந்த ஆடு, மாடு எல்லாமே வித்துதேன் ஆஸ்பத்திரிக்கு செலவு செஞ்சோம். எல்லாம் பார்த்தும் அவர காப்பாத்த முடியல. இப்ப என் மகளையும் மகனையும் பார்த்துக்கிறேன். கம்மாவெட்டு, விறகு பொறுக்குறது, களை எடுக்கனு கிடச்ச வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.
இப்போ இந்தத் தம்பிங்க, எனக்கு ரெண்டு ஆட்டுக்குட்டி கொடுத்துருக்காக. அவுக பேரு சொல்ற மாதிரி இதுங்கள பெருக்க வைக்கணும். வாழ்ந்து காட்டி அவுகளுக்கு நன்றி சொல்லணும்" என்றார் நெகிழ்ச்சியாக.
'பசியாற்று' வாட்ஸ்அப் குழு நண்பர்களிடம் பேசினோம்.
"நாங்க கடந்த மூணு வருஷமா செயல்படுறோம். ராம்குமார், உலகநாதன் உள்ளிட்ட பல நண்பர்கள் இதை ஒருங்கிணைச்சு செய்யுறாங்க. மதுரையில் உள்ள பல இடங்களிலும், ஆதரவற்றவங்களுக்கு உணவு கொடுத்துட்டு வர்றோம். அதுதான் எங்க முக்கிய நோக்கம். இப்ப அடுத்தகட்டமா எங்கயெல்லாம் உதவி தேவைப்படுதோ, அந்த தகவலை விசாரிச்சு உறுதிப்படுத்திட்டு உதவி செய்றோம்.
வாட்ஸ் அப் குழுவில் எல்லா கணக்கு வழக்குகளையும் தெளிவா பகிர்வதால, குழுவில் உள்ள எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்படுது. கொரோனா காலகட்டத்தில் பல ஆக்கபூர்வ பணிகள செஞ்ச திருப்தி இருக்கு.
எட்டிமங்கலம் பேச்சியம்மாளுக்கு முதல் கட்டமா ஆடு வாங்கிக் கொடுத்துருக்கோம். இப்படி பல இடங்களுக்கும் எங்களோட சின்னச் சின்ன உதவிகள் சென்று சேருது. இது அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம் அடையும்னு நம்புறோம்" என்றனர் மகிழ்ச்சியாக.
source https://www.vikatan.com/news/women/whatsapp-group-friends-helped-a-woman-who-is-suffering-from-poverty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக