2016 அக்டோபர் 20-ம் தேதி மற்றும் அதற்கு முன் பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்ட மனைகள், மனைப் பிரிவுகள் மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த 2017 நவம்பர் 3-ம் தேதி வரை அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை, பின்னர் 2018 நவம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியும் பல ரியல் எஸ்டேட் லே அவுட்களில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
அதன் பிறகு எந்த ஓர் அனுமதியற்ற மனைப்பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு மனையை வரன்முறை செய்வதற்கான விண்ணப்பம், மேலே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட மனைப் பிரிவில் அமையும் எஞ்சிய விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகள் அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் தனியாக விண்ணப்பம் செய்து கால தாமத்துக்கான கட்டணம் செலுத்தி வரன்முறை செய்துக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், வரன்முறைத் திட்டத்தின் கீழ் ஒரு மனைக்கு கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய தவறிய பல அனுமதியற்ற மனைப்பிரிவு உரிமையாளர்கள் மற்றும் கிரெடாய் உள்ளிட்ட வெவ்வெறு அமைப்புகள், பொதுமக்கள் நகர் ஊரமைப்பு இயக்குநரத்திடம், கால அவசாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது குறித்து டி.டி.சி.பி அதிகாரிகள் பலரிடம் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டிருக்கிறார்கள்.
அதில், `திட்ட கால அவகாசம் முடிவு பெறுவது பற்றிய விழிப்புணர்வு பஞ்சாயத்து மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு இல்லை. மேலும், இந்தக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் பலரும் இருந்ததால், விண்ணப்பிக்கத் தவறிவிட்டனர்' எனத் தெரியவந்தது. 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளை விற்க தடையில்லை என்பதால் பலரும் மெத்தனமாக இருக்கிறார்கள். ஆனால், இந்த இடங்களில் வீடு கட்டும்போது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க மனைக்கு அப்ருவல் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் அனுமதி பெற்று வைப்பது நல்லது.
இதையடுத்து, 2021 ஜனவரி 25-ம் தேதி அன்று, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``அங்கீகாரமற்ற மனை மற்றும் மனைப் பிரிவுகளை விவரம் தெரியாமல் வாங்கியவர்களுக்காகவும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைப்படி தங்களுடைய அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய தவறியவர்களுக்காகவும் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 2016 அக்டோபர் 20-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவில் அமைந்த விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் 2021 பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: வீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்..? பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..?
பெயர் குறிப்பிட விரும்பாத ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூறும்போது, ``இந்த அரசாணை 2021 ஜனவரி 25-ம் தேதி வெளியாகி இருக்கிறது. ஆனால், 30-ம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலம் பணம் கட்டும் வசதி செயல்பாட்டுக்கு வரவில்லை. தமிழ்நாடு முழுக்க பல லட்சக்கணக்கான அனுமதியற்ற மனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், லே அவுட்களில் விற்பனையாகாமல், பத்திரம் பதிவு செய்யப்படாமல் லட்சக்கணக்கான மனைகள் கிடக்கின்றன. இவற்றை எல்லாம் வரன்முறை செய்ய இந்த ஒரு மாத கால அவகாசம் போதாது என்றே சொல்ல வேண்டும்.
மேலும், பல அரசு அலுவலங்களில் ஆள் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. மேலும், நம் அரசு பணியாளர்கள், அலுவலர்கள் எவ்வளவு வேகமாக வேலை பார்ப்பார்கள். இது போன்ற ரியல் எஸ்டேட் அப்ரூவல் விஷயங்களுக்கான `சிறப்பு நடைமுறைகள்’ பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்த அப்ரூவலை பெறுவதற்குள் எத்தனை நாள்கள் வேலைக்கு விடுமுறை போட வேண்டும். எவ்வளவு பணம் செலவாகும் என்பது கடவுளுக்குதான் தெரியும்" எனப் புலம்பி தீர்த்துவிட்டார்.
அனுமதியற்ற பஞ்சாயத்து மனைகளை தமிழகம் முழுக்க கிராமப்புறங்களில் வாங்கிப் போட்டிருப்பவர்களில் பலர் இப்போது சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இந்த அப்ரூவல் வேலையை செய்வதில் நிச்சயம் சிக்கலை சந்திப்பார்கள்.
Also Read: RERA பதிவு அவசியமும், சரிபார்த்தலும்... மனை, வீடு வாங்குவோர் கவனத்துக்கு!
எனவே, அரசு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். அல்லது இந்தத் திட்டத்தை நிரந்தர திட்டமாக்கிவிட்டு, விற்கும்போது அல்லது வீடு கட்டும்போது கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை கொண்டு வர வேண்டும். அனுமதி அளிக்கும் நடைமுறையில் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். இதை எல்லாம் தீர்க்கும் விதமாக விதிமுறைகளை எளிதாக்குவதோடு, நியாயமான குறை தீர்வு அமைப்பு ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்பது பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இருந்தாலும் இது போன்ற வாய்ப்பை மீண்டும் தமிழக அரசு அளிக்குமா என உறுதியாகத் தெரியாது. லே அவுட் போட்டவர்களும் அனுமதியற்ற மனைகளைப் பத்திரப் பதிவு செய்திருப்பவர்களும், தங்கள் மனைகளுக்கு ரூ. 500 கட்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைப்பது நல்லது.
பணம் கட்ட வேண்டிய ஆன்லைன் லிங்க்
source https://www.vikatan.com/business/real-estate/tamilnadu-govt-gives-the-option-to-get-panchayat-approval-for-real-estate-approved-layout
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக