Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காவல்துறை உயர் அதிகாரி மீது மாவட்ட பெண் அதிகாரி பாலியல் புகாரா?! - பரபரக்கும் காக்கிகள் வட்டாரம்

தமிழக காவல்துறையில் மிக உயர் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரி அவர். அவர் மீது மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், பாலியல் ரீதியிலான புகார் ஒன்றை அளித்திருப்பதாக பரவும் செய்தியால் காவல்துறைக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி மேலிடத்தின் ஆசியைப் பெற்ற பெற்ற அந்த உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரி, சமீபத்தில்தான் மெரினா கடற்கரைக்கு எதிரே இருக்கும் காவல்துறை தலைமையகத்துக்கு குடிபெயர்ந்தார். அவர் பெயரைக் கேட்டாலே, மாவட்ட எஸ்.பி-கள் அலறுகிறார்கள். அந்தளவுக்கு ஐ.பி.எஸ் வட்டாரத்தில், ‘டார்ச்சர் பேர்வழி’ என்று பெயர் பெற்றவர் அவர்.

பாலியல் தொல்லை

அப்படிப்பட்டவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு, டெல்டா பகுதிகளுக்கு சென்றபோது முதல்வரின் பாதுகாப்புக்காக உடன் சென்றிருக்கிறார். வழியில், மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி தன் மாவட்ட எல்லையில் நின்று சல்யூட் அடித்தாராம். பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன், ‘சட்டம்-ஒழுங்கு விஷயமாக பேசவேண்டும். என்கூட கார்ல வாம்மா’ என்று அந்த பெண் அதிகாரியை தன் காரில் உயரதிகாரி வரச் சொல்லியிருக்கிறார். காருக்குள் சட்டம் - ஒழுங்கு பேச்சையும் தாண்டி, அந்த பெண் அதிகாரியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. உயரதிகாரியின் அத்துமீறலை சகித்துக் கொள்ள முடியாமல், அவரின் கையைத் தட்டிவிட்டும், கடும் கோபமாக எச்சிரித்தும் பார்த்திருக்கிறார் அந்த பெண் அதிகாரி. ஆனால், உயரதிகாரியின் காதில் எதுவுமே விழவில்லையாம்.

வழியில் சில காவலர்கள் உயரதிகாரியை வரவேற்பதற்காக நின்றவுடன், கார் அங்கே ப்ரேக் போடப்பட்டிருக்கிறது. கார் நின்றவுடன் பதட்டமாக காரைவிட்டு இறங்கிய பெண் அதிகாரி, படபடப்பு குறையாமல் இருந்துள்ளார். பிப்ரவரி 22-ம் தேதி காலை சென்னை புறப்பட்ட அவர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியிடமும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும் நேரில் இந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மைதானா? வதந்தியா? என்பது பற்றி என்று அறிய போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

தமிழக காவல்துறை

''சம்பவம் நடைபெற்றது உண்மைதான். புகாருக்கு உள்ளான அந்த உயரதிகாரி மீது இதுபோல ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவின் ஆட்சியில், இதே போன்றதொரு பாலியல் புகாரில் சிக்கித்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை போது, அந்த உயரதிகாரி முக்கியப் பொறுப்புக்கு வர முடியவில்லை. டம்மி பதவியில்தான் இருந்து வந்தார். பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான பெண் அதிகாரியின் புகார், விசாரணைக்காக விசாகா கமிட்டிக்கு உடனே அனுப்பவேண்டும். உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரியை விட்டு விசாரிக்க சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது'' என்றனர்.

இன்னொரு உயர் அதிகாரியிடம் விசாரித்தபோது, '' டி.ஜி.பி. அலுவலகத்தில் இரண்டு கோஷ்டிகள் செயல்படுகின்றன. அதன் எதிரொலியாக அந்த உயர் அதிகாரியைப் பற்றிய தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. முதல்வர் கவனத்துக்கு சென்றுள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் '' என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/women-police-officers-harassment-complaint-against-higher-police-officer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக