அ.ம.மு.க அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்த டி.டி.வி தினகரன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ``நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப்பின் சசிகலா தமிழகம் வருகிறார். தமிழக மக்கள் எதிர்ப்பார்ப்போடு காத்துள்ளனர். தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென வரவேற்பு அளிக்க உள்ளனர். சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டுள்ளது” என்றார்.
`நீங்கள் மன்னிப்பு கேட்டு, மனு அளித்தால் அ.தி.மு.க வில் இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளாரே...' என்ற கேள்விக்கு, பதிலளித்த தினகரன், ``யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை காலம் முடிவு செய்யும். அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என இந்த ஆட்சியை அமைத்தவர் சசிகலா” என்றார்.
தொடர்ந்து பேசிய தினகரன், ``அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள். அது நடக்காது. சசிகலா அ.தி.மு.க அலுவலகத்தில் பொதுக்குழுவை கூட்டுவாரா என்பது சஸ்பென்ஸ். அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவே அ.ம.மு.க தொடங்கப்பட்டது" என்றார்.
'மருத்துவமனையில் இருந்து சசிகலா சென்ற காரில் அ.ம.மு.க கொடியை கட்டாமல் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டது பற்றி?’ கேட்டதற்கு, ``அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. பொதுக்குழுவை கூட்ட, கட்சித் தேர்தலை நடத்த, கட்சியை விட்டு நீக்க அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர். வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு தான் அதிகாரம் உண்டு. அ.தி.மு.க-வை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார். எங்களுக்கு குறுகிய மனப்பான்மை கிடையாது. யார் என்ன பேசினாலும் சிரித்துக்கொண்டே ரசிக்கிறோம்" என்றார்.
Also Read: மதுரை: `பிப்ரவரி 7 -ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா!’ - திருமண விழாவில் தினகரன் #NowAtVikatan
`தேர்தலில் தனித்து போட்டியா?' என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், ``தேர்தலில் தனித்து போட்டியா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.
'அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?' என்றதற்கு, ``அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்பதை சசிகலா கூறுவார்" என்றார். `சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டினால், அவரை எதிர்த்து ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவேன் என்று சிவி சண்முகம் கூறியுள்ளாரே?’ என்ற கேள்விக்கு, ``அதை சி.வி.சண்முகம் நிதானத்தில்தான் பேசினாரா என்பதை கேட்டு சொல்லுங்கள்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ttv-dinakaran-press-meet-regarding-sasikala-coming-back-to-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக