யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் புதிதாக கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கொரோனில் என்று பெயரிடப்பட்டுள்ள அம்மருந்து மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சமீபத்தில் இம்மருந்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம் தேவ், தங்களது கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார மையத்தின் ஒப்புதல் கிடைத்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். கொரோனில் மாத்திரை கொரோனாவை எதிர்த்துபோராடுகிறது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
பாபா ராம்தேவின் இந்த கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திய மருத்துவ கவுன்சில், `உலக சுகாதார மையம் எந்தவித மருந்துக்கும் ஒப்புதல் கொடுக்கவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான கருத்து முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்து இருந்தது. பாபா ராம் தேவின் மருந்து வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஹர்ஷ்வர்தன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. உலக சுகாதார மையமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பாரம்பரிய மருந்துக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
Also Read: "அறமா அமைச்சர்களே?!"- பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தும், சர்ச்சைகளும்!
இந்நிலையில் பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``முறையான சான்றிதழ் இல்லாமல் கொரோனில் மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்கமுடியாது. இந்த மருந்தின் துவக்க விழாவில் இரண்டு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டது மிகவும் மோசமான ஒன்றாகும். கொரோனில் ஆயுர்வேத மருந்து குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் சந்தேகம் எழுப்பி இருக்கிறது. எனவே முறையான அனுமதி இல்லாமல் கொரோனில் மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/we-will-not-allow-patanjalis-coronil-to-be-sold-in-maharashtra-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக