மும்பையில் பில்டர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்தவர் ரவிபுஜாரி. இவர் மீது மும்பையில் மட்டும் 80 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கர்நாடகாவில் 100 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. பெங்களூருவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவிபுஜாரி, மும்பைக்கு வந்தான். 1996ம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து நேபாளம், பேங்காக், உகாண்டா போன்ற பகுதியில் பதுங்கி இருந்தான். இறுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செனகல் நாட்டில் பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். மும்பையில் உள்ள வழக்குகள் குறித்து ரவி புஜாரியிடம் விசாரிக்க அவனை மும்பைக்கு அழைத்து வர மும்பை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பெங்களூருவில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு ரவிபுஜாரி தேவையாக இருந்ததால் எளிதில் மும்பைக்கு அழைத்து வர முடியவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெங்களூரு கோர்ட் கடந்த வாரம் ரவி புஜாரியை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து ரவிபுஜாரி பெங்களூருவில் இருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டான். அவனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ரவிபுஜாரியை மார்ச் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ரவிபுஜாரியை போலீஸார் சிறையில் அடைக்காமல் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மும்பை போலீஸாரின் கஸ்டடியில் சில மாதங்கள் ரவிபுஜாரி இருப்பான் என்று தெரிகிறது. தற்போது கஜாலி ஓட்டலில் 2016ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் மும்பைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளான். இது தவிர மிகவும் பிரபலமான தீபா பாரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, செம்பூர் பில்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற பல வழக்குகளும் உள்ளன. ரவி புஜாரி மும்பையில் இருந்து சென்ற பிறகு, அந்தோணி பெர்னாண்டஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டான். பின்னர் டோனி பெர்னாண்டஸ் என்றும் ராக்கி பெர்னாண்டஸ் என்றும் மாற்றிக்கொண்டு அதற்கு தக்கபடி பாஸ்போர்ட் தயாரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு அங்கிருந்து கொண்டே தனது கூட்டாளிகள் மூலம் மும்பையில் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான். அமிதாப்பச்சனின் அமர் அக்பர் அந்தோணி படத்தை பார்த்துவிட்டு அது மிகவும் பிடித்து போய் தனது பெயரை டோனி பெர்னாண்ட்ஸ் என்று மாற்றிகொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிபுஜாரி கைது செய்யப்பட்டு இருப்பதால் மும்பையில் முக்கிய பிரமுகர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளனர். சோட்டாராஜனின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் ரவி புஜாரி 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். சோட்டாராஜனும் ஏற்கனவே இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இது தவிர மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அபுசலேமும் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து காதலியுடன் நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டுவிட்டான். ஆனால் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/social-affairs/crime/the-mumbai-police-brought-ravi-pujari-who-has-been-wanted-for-20-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக